/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி கலைத்திருவிழா; மாணவர்களுக்கு சான்றிதழ்
/
கல்லுாரி கலைத்திருவிழா; மாணவர்களுக்கு சான்றிதழ்
ADDED : அக் 29, 2025 12:09 AM

வால்பாறை: வால்பாறை, அரசு கல்லுாரியில் நடந்த கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 'கல்லுாரி கலைத்திருவிழா' துவங்கப்பட்டுள்ளது.கலைத்திருவிழா கடந்த மாதம் 16 ம் தேதி துவங்கி, அக். 10ம் தேதி வரை நடந்தது.
கவிதை, கட்டுரை, நடனம், இசை, ஓவியம், சிறுகதை, பேச்சு, பாட்டு உள்ளிட்ட, 30 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில், 1,050 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லுாரி சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ரூபா வரவேற்றார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் கோவிந்தராஜ் அறிக்கையை சமர்ப்பித்தார்.
விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லுாரி முதல்வர் ஜோதிமணி பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:
மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், தமிழக அரசு இந்த கல்வியாண்டு கலைத்திருவிழா நடத்தியது. கல்லுாரி அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்து பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியிலும், அதன் பின் மாநில அளவிலான போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர்.
மாணவர்கள் படிப்பில் மட்டும் இன்றி பிற துறைகளிலும் சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். படிக்கும் வயதில் மாணவர்கள் மனதில் தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் தரக்கூடாது.
கல்வியால் மட்டுமே உலகத்திற்கு உங்களை அடையாளம் காட்ட முடியும் என்பதை உணர்ந்து, வாய்ப்பை பயன்படுத்தி நல்ல முறையில் படித்து, உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.
இவ்வாறு, பேசினார். வணிக மேலாண்மைத்துறை உதவி பேராசிரியர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

