
பசுமையான கோவைதுாய்மையே இலக்கு
கோவை காளப்பட்டி சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பசுமையான கோவைக்கு துாய்மை பணியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி நடந்தது.
பேரணியை, கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கிவைத்தார். சித்ரா சுகுணா கலையரங்கில் துவங்கிய பேரணி சுகுணா கலை அறிவியல் கல்லுாரியில் நிறைவு பெற்றது.
நிகழ்வில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். துாய்மையான கோவையாக மாற்ற நாம் செய்யவேண்டியவற்றை கோஷங்களாக எழுப்பியும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் சென்றனர். சுகுணா குழும தலைவர் லஷ்மி நாராயணசாமி, தாளாளர் சுகுணாலஷ்மி, செயலர் ஸ்ரீகாந்த் கண்ணன், இயக்குனர் சேகர், கல்லுாரி முதல்வர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
டாப் விஞ்ஞானிகள் பட்டியலில் கே.பி.ஆர்., பேராசிரியர்கள்
ஆண்டுதோறும், ஸ்டேன்போட் பல்கலை, உலகின் 'டாப்' விஞ்ஞானிகள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி, சமீபத்தில் வெளியான இப்பட்டியலில், கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின் ஆறு பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கே.பி.ஆர்., கல்லுாரியில், சுற்றுச்சூழல் அறிவியல் துறை பிரியா, வலையமைப்பு மற்றும் தொலைதொடர்பு துறை விக்னேஸ்வரன், ஆற்றல் துறை கார்த்திக், மெட்டீரியல்ஸ் துறை மனோஜ்குமார், பயன்பாட்டு இயற்பியல் துறை ரஞ்சித்குமார், பாலிமர்ஸ் துறை பாலாஜி உள்ளிட்டோர் இதில் தகுதி பெற்றனர்.
ஸ்டேன்போட் பல்கலை பட்டியலில் இடம் பெற்ற பேராசிரியர்களை கல்லுாரி முதல்வர் சரவணன், சக பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பிசியோ அரைஸ் போட்டி ரத்தினம் கல்லுாரி அசத்தல்
தமிழ்நாடு பிசியோதெரபி டாக்டர்கள் சங்கம் சார்பில், 'பிசியோ அரைஸ் - 2024' திறனாய்வு போட்டிகள் எஸ்.எம்.எஸ். மஹாலில் நடந்தது.
மாநில அளவில், 11 பிசியோதெரபி கல்லுாரிகள் இப்போட்டிகளில் பங்கேற்றன. கோவை ரத்தினம் கல்லுாரியில் இருந்து, 52 மாணவர்கள் பல்வேறு பிரிவுகளின் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஆப்லைன், ஆன்லைன் முறையில் அறிவியல், கலை, கலாசாரம் உள்ளிட்ட படைப்பாற்றல் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில், ரத்தினம் கல்லுாரி மாணவர்கள் முகக்கலை போட்டியில் முதல் பரிசும், பிசியோ புத்தாக்க போட்டி, ஓவியப்போட்டி, குறும்பட போட்டிகளில் இரண்டாம் பரிசும், போஸ்டர் தயாரிப்பு, வினாடி வினா, காய்கறி செதுக்கல், மெஹந்தி, தனி நடனம், குழு நடனம் ஆகிய போட்டிகளில், மூன்றாமிடமும் பெற்றனர்.
அனைத்து பிரிவுகளின் கீழ், புள்ளிகளின் அடிப்படையில் ரத்தினம் பிசியோதெரபி கல்லுாரி இரண்டாம் இடத்தை தட்டிச்சென்றது. வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி முதல்வ் கார்த்திகேயன், சக ஆசிரியர்கள் பாராட்டினர்.
நான் முதல்வன் நிரல் திருவிழா கோவை மாணவர்கள் அசத்தல்
தமிழக அரசு சார்பில் நடந்த, 'நான் முதல்வன்' நிரல் திருவிழாவில், கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் வடிவமைத்த தானியங்கி சைக்கிள், முதல் பரிசை வென்றது. மாணவர்களுக்கு ஒரு லட்சம் பரிசுத்தொகையை, துணை முதல்வர் உதயநிதி வழங்கி கவுரவித்தார்.
இளைஞர்களின் தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாட்டை மையமாக கொண்டு நான் முதல்வன் திட்டத்தில் நிரல் திருவிழா நடத்தப்பட்டது. மாநில அளவில், 290 பொறியியல் கல்லுாரிகளில் இருந்து 8,486 புதிய கண்டுபிடிப்புகளுக்கான செயல்திட்டம் காட்சிப்படுத்தப்பட்டன. இதில், மேற்கு மண்டல அளவிலான கல்லுாரிகளில் கண்டுபிடிப்புக்கு முதல் பரிசை கோவை கே.ஐ.டி., கல்லுாரி மாணவர்கள் தட்டிச்சென்றனர்.
ஆட்டிசம், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்தியாவின் முதல் தானியங்கி மின்சார சுழற்சியை மையமாக கொண்டு இயங்கும் வகையில் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் மாதேஸ்வரன், லோகேஸ்வரன், அபினேஷ், பிரேம்குமார், கிளாட்சன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.
மாணவர்களை கல்லுாரி தலைவர் பொங்கலுார் பழனிசாமி, துணைத்தலைவர் இந்து முருகேசன், தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ், முதல்வர் ரமேஷ் பாராட்டினர்.