/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலவச கல்வித்திட்டத்தில் ஆர்வமில்லாத கல்லுாரிகள் நடவடிக்கை எடுத்து ஒழுங்குபடுத்துமா பல்கலை
/
இலவச கல்வித்திட்டத்தில் ஆர்வமில்லாத கல்லுாரிகள் நடவடிக்கை எடுத்து ஒழுங்குபடுத்துமா பல்கலை
இலவச கல்வித்திட்டத்தில் ஆர்வமில்லாத கல்லுாரிகள் நடவடிக்கை எடுத்து ஒழுங்குபடுத்துமா பல்கலை
இலவச கல்வித்திட்டத்தில் ஆர்வமில்லாத கல்லுாரிகள் நடவடிக்கை எடுத்து ஒழுங்குபடுத்துமா பல்கலை
ADDED : பிப் 08, 2024 11:23 PM
கோவை- பாரதியார் பல்கலையில் பல்வேறு தரப்பின் வரவேற்பு பெற்ற இலவச கல்வித்திட்டத்தை செயல்படுத்துவதில், கல்லுாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்றும், பல்கலை தரப்பில் இதை கண்டு கொள்வதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
கடந்த, 2006ம் ஆண்டு முன்னாள் துணைவேந்தர் திருவாசகம் சார்பில், பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளில், இலவச கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் வாயிலாக, 400க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச கல்வி வாய்ப்பு கிடைத்தது. சேர்க்கையில் பல்வேறு குளறுபடி நடப்பதாக கூறி, 2017ல் இத்திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டது. இருப்பினும், முறைகேடுகளை களைந்து இத்திட்டத்தை செயல்படுத்த பலர் வலியுறுத்தினர். 2021ல் முன்னாள் துணைவேந்தர் காளிராஜ் சிறப்பு குழு அமைத்து, இத்திட்டத்தை ஆய்வு செய்தார். பின், 2022-23ம் ஆண்டில் ஒரு கல்லுாரிக்கு, 15 மாணவர்கள் பயன் பெறும் வகையில், திட்டத்தை விரிவுபடுத்தி மீண்டும் அமல்படுத்தினார்
விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், ஒரு கல்லுாரியில், துறைக்கு அதிகபட்சம் மூன்று பேர் வீதம், கல்லுாரிக்கு, 15 பேர் சேர்த்துக்கொள்ள இயலும். இதன் வாயிலாக, சுமார், 1,500 மாணவர்கள் இலவசமாக உயர்கல்வியை தொடரமுடியும். ஆனால், ஒரு சில கல்லுாரிகள் தவிர்த்து பெரும்பாலான கல்லுாரிகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இதுகுறித்து, பல்கலை செனட் உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:
இலவச கல்வித்திட்டத்தின் கீழ், நுாற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற முடியும். ஆனால், பல கல்லுாரிகள் இதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. பல்கலையின் கட்டுப்பாட்டில், 133 கல்லுாரிகள் உள்ளன. இருப்பினும், 12 கல்லுாரிகளில் இருந்து 86 விண்ணப்பங்கள் மட்டுமே, 2022-23 கல்வியாண்டில் பெறப்பட்டுள்ளன. 2023-24 ம் கல்வியாண்டிலும் பெரிதாக சேர்க்கை இதில் இல்லை. இலவச கல்வித்திட்டத்தில் விண்ணப்பங்கள் வருவதில்லை என்ற கல்லுாரிகளின்பதில்கள் வேடிக்கையாக இருக்கின்றன. பல்கலையும் இதை முறையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. முன்பு அறிவித்தது போன்று, ஒற்றைசாளர முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வரும் கல்வியாண்டில் பல்கலை இத்திட்டத்தில் 100 சதவீத சேர்க்கையை உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

