ADDED : செப் 17, 2026 05:42 PM
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், மருத்துவ முகாம், மொபைல் கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும் என, செயல் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலமான, காரமடை அரங்கநாதர் கோவிலில், நாளை புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா துவங்க உள்ளது. பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கூட்டம், அரங்கநாதர் கோவிலில் நடந்தது. மேட்டுப்பாளையம் தாசில்தார் சரவணகுமார் தலைமை வகித்தார். கோவில் செயல் அலுவலர் முத்துசாமி வரவேற்றார். காரமடை நகராட்சி, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு போக்குவரத்து கழகம், தீயணைப்பு உள்பட பல்வேறு அரசு துறைகளின் அலுவலர்கள் பங்கேற்றனர்.
கோவில் செயல் அலுவலர் முத்துசாமி பேசியதாவது:
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவது வழக்கம். இவர்கள் வரிசையில் நின்று சுவாமியை வழிபட தேவையான தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. கோவிலில் ஒரு கழிப்பிடம் மட்டுமே உள்ளது. அதனால் நகராட்சி நிர்வாகம், மொபைல் கழிப்பிடம் அமைக்க வேண்டும். குடிநீர் வசதியும் செய்து தரவேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். பக்தர்கள் வசதிக்காக மேட்டுப்பாளையம், கோவையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். தீயணைப்பு வாகனம் நிறுத்தவும், கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தாசில்தார் சரவணகுமார் பேசுகையில், ‘‘அந்தந்த துறை அதிகாரிகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்,’’ என்றார்.
