UPDATED : நவ 25, 2026 06:50 PM
ADDED : நவ 25, 2026 06:50 PM
திருமணம் மற்றும் குடும்பம் தொடர்பான வழக்குகளை விரைவாகவும், சமரசமாகவும் தீர்க்க குடும்ப நீதிமன்ற சட்டம், 1984,செப். 14ல் கொண்டுவரப்பட்டது.
சிவில் நீதிமன்றங்களின் நீண்ட கால தாமதம் மற்றும் கடுமையான நடைமுறைகளை தவிர்த்தல், குடும்ப பிரச்னைக்கு விரைவான தீர்வு காணுதல், வழக்கு தொடங்கும் முன்பே இரு தரப்பினரிடையே சமரசம் மற்றும் ஆலோசனை வாயிலாக தீர்வு காண முயற்சித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
குடும்ப நல நீதிமன்றத்தில், திருமண ரத்து, சட்டப்படியான பிரிவு, விவாகரத்து மற்றும் இல்லற உரிமை மீட்பு, திருமணத்தின் செல்லுபடியாகும் தன்மை மற்றும் திருமண நிலை தொடர்பான வழக்குகள், கணவன்– மனைவிக்கு இடையிலான சொத்து தகராறுகள், ஜீவனாம்சம் கோரும் வழக்குகள், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உரிமை ஆகியவை குறித்து வழக்கு தாக்கல் செய்யலாம்.
குடும்ப நல கோர்ட்டில், வழக்கின் ஆரம்ப நிலையிலேயே ஆலோசகர்கள் வாயிலாக சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படும். குடும்ப விவகாரங்களின் தன்மை கருதி, வழக்கு விசாரணை ரகசியமாக நடைபெறும். தேவைப்படும் இடங்களில் மருத்துவ மற்றும் குடும்ப நல நிபுணர்களின் உதவியை நீதிமன்றம் கோரலாம்.
ஒவ்வொரு வழக்கிலும், அதன் தன்மை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப இயன்றவரை, குடும்ப நீதிமன்றம் முதற்கட்டமாக, அந்த வழக்கு தொடர்பாக சமரசத்திற்கு வருவதற்கு இரு தரப்பினருக்கு உதவி செய்யப்படும். அவர்களை சேர்ந்து வாழ வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
குடும்ப நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஏதேனும் விதிகளுக்கு உட்பட்டு, அது பொருத்தமென கருதும் நடைமுறையை பின்பற்றவும் உத்தரவிட்டுள்ளது.
ஏதேனும் ஒரு வழக்கில் எந்தவொரு கட்டத்திலும், தரப்பினரிடையே ஒரு சமரசம் ஏற்படுவதற்கு நியாயமான சாத்தியக்கூறு இருப்பதாக குடும்ப நீதிமன்றத்திற்கு தோன்றினால், அத்தகைய சமரசம் ஏற்படுத்துவதற்கான முயற்சிக்கலாம். அதற்கு ஏதுவாக, குடும்ப நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்திற்கு வழக்கை ஒத்திவைக்கலாம்.
