ADDED : செப் 11, 2026 04:02 PM
எந்த காலகட்டத்திலும் தொல்லையாக அமைவது மொட்டைமாடி தளமே. செங்கல், ஜல்லி, சுண்ணாம்பு, கான்கிரீட் தளவரிசைக்கு மேல் உள்ள சிவப்பு ஓட்டில் ஏற்படும் விரிசல் வழியாக மழைநீர் புகுந்து கசிவை உண்டாக்குகிறது.
பழைய கட்டடங்களில் கூரை ‘ல்லாப் கான்கிரீட்’டில் உள்ள கம்பிகள் துருப்பிடித்து வெடிப்புகள் தோன்றுகின்றன. கூரைத்தளத்தில் கான்கிரீட் போட்டவுடன் நீர்ப்புகாத வேதிப்பொருள் கலந்த சிமென்ட் மணல் கலவை 1:3 விகிதத்தில் 20 மி.மீ., கனத்திற்கு பூச வேண்டும்.
இதனால், கான்கிரீட்டிற்கு காப்புப்போர்வை கிடைக்கிறது. நீரை உள்ளே விடாது. இதற்கு மேல் செங்கல், ஜல்லி, சுண்ணாம்பு தள வரிசை போட்ட பின்பு, சிவப்பு ஓடுகளை பதிப்பதற்கு பதிலாக, வீட்டுத் தளங்களுக்கு போடப்படும் சாதாரண மொசைக் டைல்களை, கூட்டுக் கலவை மீது(1:1:6 நீர்ப்புகாத வேதிப்பொருள் கலந்தது) வைத்து பாவிவிட வேண்டும்.
இத்தகைய மொசைக் ஓடுகளில் ஓட்டைகள், குழிப்பள்ளங்கள் ஏற்படாது. மழை நீர் ஊடுருவி ஒழுகலும் ஏற்படாது.
இதற்கு அடுத்தபடியாக தொல்லை தருபவை குளியல் அறையும், கழிவறையும்தான். இவ்வறைகளின் கான்கிரீட் பரப்பின் மீது நீர் தடுப்பு வரிசைகளை உண்டாக்க வேண்டும்.
ஒரு மூட்டைக்கு சிமென்ட் உடன் 140 மி.லி., நீர்த்தடுப்பு திரவத்தையும், ‘சூப்பர் பிளாஸ்டிசைசர்’ எனப்படும் மிக இளக்கி வேதிப்பொருளையும் 300 மி.லி.,(ஒரு சிமென்ட் மூட்டைக்கு) கலந்து, தளத்துக்கான கான்கிரீட்டை போட வேண்டும்.
நான்கு பக்க உயர சுவர்பரப்பிலும், கீழ் பரப்பிலும் நீர்ப்புகா வரிசை 18 மி.மீ., கனத்தில் நன்றாக பூச வேண்டும். குழாய்கள், கழிப்பான் தடுப்புகள் முதலியவற்றை பொருத்திய பின்பு, அதன்மீது செராமிக் டைல்ஸ், விட்ரிபைடு டைல்ஸ், மார்பிள் ஸ்லாப்கள் போட்டு பாவிய பின்பு நான்கு ஓரங்களிலும் ‘சிலிகான் சீலன்ட்’ போட்டு சந்து, பொந்துகளை நன்றாக அடைக்க வேண்டும் என்கிறார், ‘கொசினா’ உறுப்பினர் மாரிமுத்துராஜ்.
