/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு ஜப்தி நோட்டீஸ்; நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
/
வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு ஜப்தி நோட்டீஸ்; நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு ஜப்தி நோட்டீஸ்; நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு ஜப்தி நோட்டீஸ்; நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
ADDED : பிப் 11, 2025 11:32 PM
பொள்ளாச்சி; 'பொள்ளாச்சி நகராட்சியில், வரி செலுத்தாவிட்டால் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்பிரிவின்படி ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது,' என நகராட்சி கமிஷனர், எச்சரிக்கை விடுத்தார்.
பொள்ளாச்சி நகராட்சியில், 1.26 லட்சம் பேர் வசிக்கின்றனர். சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட வகையில் ஆண்டுக்கு ரூ.53.93 கோடி வருவாய் வர வேண்டியுள்ளது.
இந்த வருவாயைக்கொண்டு தான், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை மற்றும் தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகளுக்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், புதிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள், நகராட்சி ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு சம்பளம் மற்றும் மின் கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள் நகராட்சி வருவாய் நிதியிலிருந்து ஈடு செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக உரிய காலக்கெடுவிற்குள் செலுத்தப்படாமல், வரி நிலுவையாக இருந்து வருகிறது.
கடந்தாண்டு வரை சொத்து வரி, 7 கோடியே, 16 லட்சம் ரூபாயும், காலி மனை வரி, 1 கோடியே, 97 லட்சம், குடிநீர் கட்டணம், 32 லட்சத்து, 58 ஆயிரம் ரூபாய்; பாதாள சாக்கடை கட்டணம், 44 லட்சத்து, 69 ஆயிரம் ரூபாய் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.
அதே போன்று நடப்பாண்டு செலுத்த வேண்டிய சொத்து வரி, ஆறு கோடி, 19 லட்சமும், காலிமனை வரி, 80 லட்சம், குடிநீர் கட்டணம், ஒரு கோடியே, 74 லட்சமும்; தொழில் வரி, 90 லட்சத்து, 28 ஆயிரம் ரூபாய்; குப்பை சேவை கட்டணம், 31 லட்சத்து, 38 ஆயிரம் ரூபாய்; பாதாள சாக்கடை கட்டணம், 71 லட்சத்து, 409 ஆயிரம் ரூபாய் இன்னும் செலுத்தப்படாமல் உள்ளது.
இதை வசூலிக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு ஜப்தி நோட்டீஸ் வழங்கப்படுகிறது.
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:
சொத்து வரி முதல் அரையாண்டுக்கு செப்டம்பர் மாதத்துக்குள், இரண்டாம் அரையாண்டு, மார்ச் மாதத்துக்குள்ளும் வரிகளை நிலுவை இன்றி செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் பிரிவின் படி, ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி செலுத்த வேண்டிய வரி, கட்டண இனங்கள் செலுத்த தவறியவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து ஜப்தி செய்வதற்கான முதற்கட்ட அறிவிப்புகள் வழங்கப்படுகிறது.
அதுபோன்று நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாத வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி., உரிமத்தை ரத்து செய்யவும்;மின் இணைப்பு துண்டிக்கவும் சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.
காலிமனை வரி செலுத்தாமல், நிலுவை வைத்து இருக்கும் காலி மனைகளின் விபரங்கள், பத்திரபதிவு துறைக்கு தெரிவித்து அந்த மனைகள் பதிவு மேற்கொள்ள தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நகராட்சிக்கு வர வேண்டிய வருவாய்கள், அதிகளவு நிலுவையாக இருப்பதால், நகராட்சி மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள், அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள இல்லாமல் நிதி நெருக்கடியில் உள்ளது.
எனவே, பொள்ளாச்சி நகராட்சி பகுதி பொதுமக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனத்தினர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி மற்றும் கட்டணங்களை, உடனடியாக செலுத்தி நகராட்சி உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் நலன் கருதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கணினி வசூல் மையம் செயல்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.