/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நெரிசல் பிரச்னைக்கு விமோசனம் பிறந்தது!
/
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நெரிசல் பிரச்னைக்கு விமோசனம் பிறந்தது!
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நெரிசல் பிரச்னைக்கு விமோசனம் பிறந்தது!
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நெரிசல் பிரச்னைக்கு விமோசனம் பிறந்தது!
ADDED : பிப் 20, 2024 05:10 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில், 'ரவுண்டானா' அமைக்க நெடுஞ்சாலைத்துறை வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு இடையூறு உள்ளாக மின்கம்பங்களை இடமாற்றம் செய்து கொடுக்க, மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல், மார்க்கெட் ரோடு வழியாக தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கேரளா மற்றும் ஆனைமலை சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு செல்கின்றன.
மார்க்கெட் ரோடு பகுதிகளில் அதிகளவு வணிக வளாகங்கள், குடோன்கள் உள்ளதால், சரக்கு ஏற்றி வரும் லாரிகளும் அதிகமாக வந்து செல்கின்றன.
இப்பகுதியில் கனரக வாகனங்கள் ரோட்டிலேயேநிறுத்தப்பட்டு, சரக்குகள் இறக்கப்படுகின்றன. இதனால், அந்த வாகனங்களை அணிவகுத்து மற்ற வாகனங்கள் நிற்க வேண்டிய அவல நிலை காணப்படுகிறது.
திருவள்ளுவர் திடலில், 'ரவுண்டானா' அமைக்காததால், வாகனங்கள் வேகமாக வந்து மோதிக்கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன.
போக்குவரத்து நெரிசல்
மேலும், சந்திப்பு பகுதியில், நான்கு புறங்களிலிருந்து வரும் வாகனங்கள், ரோட்டில் நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களாலும் நெரிசலுக்கு பஞ்சமில்லை.
அரசியல் கட்சி கூட்டங்களும் இங்கு நடப்பதால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மீன்கரை ரோடு, மார்க்கெட் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், திருவள்ளுவர் திடலில், 'ரவுண்டானா' அமைக்கவும், அங்குள்ள சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பகுதியை மாற்று இடம் ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், திருவள்ளுவர் திடலில், ரவுண்டானா அமைப்பதற்கான நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கடந்த சில வாரங்களுக்கு முன் அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சாலை பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி கோட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட எட்டு இடங்களில், சாலை சந்திப்புகள் மேம்படுத்துதல் மற்றும் ரவுண்டானா அமைக்கும் பணிக்காக மொத்தம், 11 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதில், திருவள்ளுவர் திடல் அருகே ரவுண்டானா அமைக்கப்படுகிறது. மார்க்கெட் ரோட்டில், 'யூடர்ன்' (ரோடு திருப்பம்) அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
அதே போன்று கிணத்துக்கடவில், வடசித்துார் நான்கு ரோடு சந்திப்பு, காட்டம்பட்டியில் கிணத்துக்கடவு பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் மேம்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

