UPDATED : அக் 13, 2026 08:42 PM
ADDED : அக் 13, 2026 08:36 PM

மேட்டுப்பாளையம்: காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரும்பனுார் இந்திரா நகர் பாலம் கட்டுமான பணிகள் மந்த கதியில் நடக்கிறது.
காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சிக்கதாசம்பாளையம், தேக்கம்பட்டி ஆகிய இரண்டு ஊராட்சிகளின் எல்லையில், குரும்பனூர் இந்திரா நகரில், பெரிய பள்ளம் உள்ளது. பள்ளத்தில் தரைமட்ட பாலம் ஒன்று இருந்தது. இங்கு நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், நபார்டு திட்டத்தில், உயர் மட்ட பாலம் கட்ட, 2.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. குரும்பனூர் இந்திரா நகர் குடியிருப்புகளின் கழிவுநீர் செல்வதற்கு, சிறிய கான்கிரீட் பாலமும், பள்ளத்தில் உயர்மட்ட பாலமும் கட்டும் பணிகளை துவக்கினர். கடந்த ஒரு ஆண்டாக பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பாலத்தின் மையப்பகுதி கட்டி முடித்துள்ளனர். ஆனால் இரண்டு பக்கம் தடுப்புச் சுவர் பகுதிக்கு இன்னும் மண் கொட்டாமல் உள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக பணிகள் சரியாக நடைபெறாமல் உள்ளன.
இந்த பள்ளத்தின் வழியாக ஏராளமான பள்ளி வாகனங்கள் செல்கின்றன. சரியான சாலை வசதி இல்லாததால், பள்ளி வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், பணிகள் நடைபெறுவது என்றால், அதன் திட்ட மதிப்பீடு எவ்வளவு, பணிகள் எப்போது துவங்கியது, எப்போது கட்டி முடிப்பது, பணிகளை எந்த காண்ட்ராக்டர் செய்கிறார் என்ற, விபரங்கள் அடங்கிய விளம்பரப் பலகை வைப்பது வழக்கம். ஆனால் பாலம் கட்டும் இடத்தில் எவ்வித விளம்பர பலகையும் வைக்கவில்லை.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: குரும்பனூர் இந்திரா நகர் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் நடைபெறுவதால், அருகே சிறிய மண் பாதை அமைத்துள்ளனர். அந்த பாதை சரியாக இல்லாததால், காய்கறிகளை இரவில், இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையத்திற்கு கொண்டு செல்ல, மிகவும் சிரமம் ஏற்படுகிறது. சில நேரங்களில் இரவில் மண் பாதையில் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. எனவே பாலத்தை விரைவில் கட்டி முடிக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறுகையில்,' பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு பக்கம் தடுப்பு சுவருக்கு மண் கொட்டிய பின், தார் சாலை அமைத்தால், பாலம் கட்டுமான பணிகள் முடிவடையும். நவம்பர் மாதத்துக்குள் பாலம் முழுமையாக கட்டி முடிக்கப்படும்,'என்றார்.
