கண்டெய்னர் ரேஷன்; தொழிலாளர்கள் கோரிக்கை: படிப்படியாக மாற்றியமைக்கப்படுமென உறுதி
கண்டெய்னர் ரேஷன்; தொழிலாளர்கள் கோரிக்கை: படிப்படியாக மாற்றியமைக்கப்படுமென உறுதி
UPDATED : ஆக 18, 2026 06:14 PM
ADDED : ஆக 18, 2026 06:11 PM
வால்பாறை: வால்பாறையில், யானைகளின் பிடியில் இருந்து ரேஷன் கடைகளை பாதுகாக்க, எஸ்டேட் பகுதியில் கண்டெய்னர் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை தாலுகாவில், 16,179 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். மொத்தம் உள்ள, 21 வார்டுகளில், 47 ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
வால்பாறை நகரில் மட்டும் மூன்று ரேஷன் கடைகளும், மீதமுள்ள கடைகள் அனைத்தும் எஸ்டேட் பகுதியிலும் அமைந்துள்ளன.
வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் யானைகள் தனித்தனிக்கூட்டமாக முகாமிடுகின்றன. இவை, பகல் நேரத்தில் தேயிலை காட்டிலும், இரவு நேரங்களில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் முகாமிட்டு, வீடு மற்றும் கடைகளை இடித்து சேதப்படுத்துகின்றன.
குறிப்பாக, எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் செயல்படும் ரேஷன் கடைகளை யானைகள் சேதப்படுத்துவதால், ஆண்டு தோறும் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைவதோடு, மக்களுக்கு ரேஷன் பொருட்களும் முறையாக வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால், பெரும்பாலான எஸ்டேட் பகுதியில், கடைகளில் ரேஷன் பொருட்கள் இருப்பு வைக்க முடியாத நிலையில், மாதத்தில் ஒரு நாள் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் பொருட்களை வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
தொழிலாளர்கள் கூறியதாவது:
வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில், யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், ரேஷன் கடைகளில் பொருட்களை இருப்பு வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே, யானைகள் நடமாடும் பகுதியில், கண்டெய்னர் ரேஷன் கடைகள் அமைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
வாரத்தில் ஒரு நாள் வீதம், மாதத்தில் நான்கு நாட்கள், எஸ்டேட் பகுதியில் ரேஷன் பொருட்கள் வழங்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் எஸ்டேட் பகுதியில், படிப்படியாக கண்டெய்னர் ரேஷன் கடைகளாக மாற்றப்படும். முதல் கட்டமாக தாய்முடி, முத்துமுடி, அய்யர்பாடி உள்ளிட் ஐந்து எஸ்டேட் பகுதியில் கலெக்டர் உத்தரவு படி கண்டெய்னர் கடைகள் அமைக்கபட்டுள்ளன. மீதமுள்ள எஸ்டேட் பகுதிகளில் விரைவில் கண்டெய்னர் கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.
