/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சீருடை வழங்குவதில் தொடரும் தாமதம் பள்ளிக்கு விடுப்பு எடுக்கும் மாணவர்கள்
/
சீருடை வழங்குவதில் தொடரும் தாமதம் பள்ளிக்கு விடுப்பு எடுக்கும் மாணவர்கள்
சீருடை வழங்குவதில் தொடரும் தாமதம் பள்ளிக்கு விடுப்பு எடுக்கும் மாணவர்கள்
சீருடை வழங்குவதில் தொடரும் தாமதம் பள்ளிக்கு விடுப்பு எடுக்கும் மாணவர்கள்
ADDED : நவ 11, 2024 06:53 AM
உடுமலை : அரசுப்பள்ளிகளில், இரண்டாம் பருவத்துக்கான சீருடை வழங்கப்படாமல் இருப்பதால், மாணவர்கள் பள்ளிக்கு வருவது தடைபடுகிறது.
அரசுப்பள்ளிகளில், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, நலத்திட்ட பொருட்களில் ஒன்றாக, அரசின் சார்பில் சீருடை வழங்கப்படுகிறது. கல்வியாண்டு தோறும் நான்கு செட்கள் வழங்கப்படுகின்றன.
நடப்பு கல்வியாண்டு துவங்கி முதல் பருவம் நிறைவடைந்து, தற்போது இரண்டாம் பருவத்துக்கான வகுப்புகள் நடக்கிறது.
உடுமலை கோட்டத்தில், 200க்கும் அதிகமான அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் முதல் பருவத்தில், ஒரு செட் சீருடை மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கல்வியாண்டு துவங்கி பல நாட்களுக்கு பின்தான், மாணவர்களுக்கு முதல் செட் சீருடை வழங்கப்பட்டது.
இதனால், கல்வியாண்டின் துவக்கத்தில் பள்ளிக்கு பஸ்சில் வந்து செல்வதற்கு, பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், மாணவர்கள் பலரும் பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்தனர்.
தற்போதும் அதேபோல் ஒரு செட் சீருடை மட்டுமே இருப்பதால், மாணவர்கள் மாற்றி அணிவதற்கு கூடுதல் சீருடை இல்லாமல், மீண்டும் அடிக்கடி விடுப்பு எடுக்கின்றனர்.
மேலும், மாணவர்களுக்கான சீருடை வழக்கம்போல் சரியான அளவில் இல்லாமல் இருப்பதால், எளிதில் கிழிந்து விடுகின்றன. ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஒரே அளவில்தான் உள்ளது.
அரசின் சார்பில் வழங்கப்படும் இப்பொருள் தரமில்லாமல் இருப்பதால், பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் கூறியதாவது:
அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கான சீருடை தொடர்ந்து பிரச்னையாகவே உள்ளது. ஒரு செட் சீருடைதான் உள்ளது. அதுவும் தரமில்லாமல், முறையான அளவுகளிலும் இல்லை.
குழந்தைகளுக்கு அணிவித்து விட்டால் அவை மிகவும் இருக்கமாக உள்ளது. பள்ளி துவங்கிய சில நாட்களில் கிழிந்தும் விட்டது. மாற்றி அணிந்து செல்வதற்கு வேறு சீருடை இல்லை. இதனால் வண்ண உடைகளில் பள்ளிக்கு அனுப்ப வேண்டியுள்ளது.
அதற்கும் சில பள்ளிகளில் அனுமதி இல்லாததால், அன்றைய தினம் விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர். இப்பிரச்னைக்கு எப்போது தான் தீர்வு என தெரியவில்லை.
இவ்வாறு, தெரிவித்தனர்.