/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையை காக்க ஒருங்கிணைந்த களப்பணி தேவை! பயிர் மேலாண்மை கருத்தரங்கில் வலியறுத்தல்
/
தென்னையை காக்க ஒருங்கிணைந்த களப்பணி தேவை! பயிர் மேலாண்மை கருத்தரங்கில் வலியறுத்தல்
தென்னையை காக்க ஒருங்கிணைந்த களப்பணி தேவை! பயிர் மேலாண்மை கருத்தரங்கில் வலியறுத்தல்
தென்னையை காக்க ஒருங்கிணைந்த களப்பணி தேவை! பயிர் மேலாண்மை கருத்தரங்கில் வலியறுத்தல்
ADDED : பிப் 08, 2024 11:35 PM

ஆனைமலை : 'தென்னையில், பூச்சி, நோய்களுக்கு நிரந்தரமாக தீர்வு காண, அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த களப்பணி தேவை' என, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், காசர் கோடு அகில இந்திய ஒருங்கிணைந்த பனைப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், தென்னை சாகுபடியில் வேர்வாடல் மற்றும் சுருள் வெள்ளை ஈ மேலாண்மைக்கான கருத்தரங்கம், ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது. ஆழியாறு நகர் தென்னை ஆராய்ச்சி நிலையம் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார்.
கேரளா மாநிலம் காசர்கோடு இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக, அகில இந்திய ஒருங்கிணைந்த பனைப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ெஹப்பர் பேசியதாவது:
தென்னையில் சமீப காலமாக வெள்ளை ஈ, கேரளா வாடல் மிகப்பெரிய தாக்கம் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். அரசுத்துறைகள் தனித்தனியாக செயல்பட்டால் தகவல் பரிமாற்றம் பாதிக்கப்பட்டு, நோய் தாக்குதல் நடவடிக்கைகள் பின்னடைவு ஏற்படும்.
எனவே, தென்னை வளர்ச்சி வாரியம், அகில இந்திய பனை பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம், தோட்டக்கலைத்துறை களப்பணியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பூச்சி மற்றும் இதர நோய்களுக்கு நிரந்தரமாக தீர்வு காணவேண்டும்.
அரசு சான்றளித்த நாற்றங்காலில் இருந்து, தரமான தென்னங்கன்றுகள் வாங்கி நடவு செய்ய வேண்டும்.வயது முதிர்ந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்தி புதிய தென்னங்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
காசர்கோடு அகில இந்திய பனை பயிர்களுக்கான ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் சார்பில், தமிழகத்தில் எவ்வளவு பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை, கூகுள் பார்ம்ஸ் வைத்து வரைபடம் தயார் செய்ய வேண்டும்.
தோட்டக்கலைத்துறை களப்பணியாளர்களுக்கு, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம், காயங்குளம் மத்திய பனை பயிர்களுக்கான ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆறு நாட்கள் பயிற்சி அளிக்க வேண்டும். வேர் வாடல் நோயின் அறிகுறிகள், அதை எவ்வாறு கண்டறிவது, மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். அவர்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக, அகில இந்திய ஒருங்கிணைந்த பனைப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் ஜெரால்டு பேசுகையில், ''நோய் காரணிகளை அழிக்கும் புதிய தொழில்நுட்பங்களை திறம்பட மேற்கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள பனை பயிர்களுக்கான ஆராய்ச்சி மையத்தில் ஆயத்த திடல்கள் அமைத்து, தொழில்நுட்பத்தை உறுதிப்படுத்த வேண்டும்,'' என்றார்.தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் அறவாளி, தென்னை விவசாயிகளின் நலனுக்கான தொழில்நுட்பங்கள் மற்றும் அதற்கான நிதியுதவி குறித்து விளக்கினார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை மேலாண்மை குழு உறுப்பினர் சேதுபதி, முன்னோடி விவசாயி சோமசுந்தரம், கோவை திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி இயக்ககம் இணைப்பு பேராசிரியர் ராஜமாணிக்கம் ஆகியோர், தென்னையில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசினர்.
வேளாண் விஞ்ஞானிகள், தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் தவபிரகாஷ், மீனா, இணைப்பேராசிரியர்கள் லதா, சுதாலட்சுமி, அருள்பிரகாஷ், கோவை, திருப்பூர் உள்ளிட்ட எட்டுமாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

