/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொப்பரை, தேங்காய், எண்ணெய் விலை கிடுகிடு; இதுவரை இல்லாத உச்சம்! விளைச்சல் குறைவால் மேலும் அதிகரிக்க வாய்ப்பு
/
கொப்பரை, தேங்காய், எண்ணெய் விலை கிடுகிடு; இதுவரை இல்லாத உச்சம்! விளைச்சல் குறைவால் மேலும் அதிகரிக்க வாய்ப்பு
கொப்பரை, தேங்காய், எண்ணெய் விலை கிடுகிடு; இதுவரை இல்லாத உச்சம்! விளைச்சல் குறைவால் மேலும் அதிகரிக்க வாய்ப்பு
கொப்பரை, தேங்காய், எண்ணெய் விலை கிடுகிடு; இதுவரை இல்லாத உச்சம்! விளைச்சல் குறைவால் மேலும் அதிகரிக்க வாய்ப்பு
ADDED : மே 28, 2025 11:47 PM

பொள்ளாச்சி : கொப்பரை விலை இதுவரை இல்லாத அளவுக்கு, 210 ரூபாயாக உயர்ந்துள்ளது. தேங்காய் உற்பத்தி குறைவு, கொப்பரை உற்பத்தி இல்லாதது போன்ற காரணங்களினால் மேலும் விலை உயரக்கூடிய வாய்ப்புள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மற்ற சாகுபடிகளை விட தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், சாகுபடி செய்யப்படும் தேங்காய், கொப்பரை போன்றவை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. கொப்பரை தேங்காய் தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
தேங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் சில ஆண்டுகளாக தவித்தனர். விலை இல்லாதது; வறட்சி, நோய் தாக்குதல் போன்ற காரணங்களினால் தென்னை விவசாயிகள் மீளாத்துயரில் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கொப்பரை விலை உயர்ந்து வருகிறது. அதிக பட்சமாக கொப்பரை கிலோவுக்கு, 125 ரூபாயும், தேங்காய் எண்ணெய் (15 கிலோ) 3,500; கறுப்பு தேங்காய் ஒரு டன், 45 ஆயிரம் ரூபாய், பச்சை தேங்காய், 40 ஆயிரம் ரூபாயாக இருந்தது.
தற்போது, தேங்காய் வரத்து 40 சதவீதம் மட்டுமே உள்ளது. இதனால், கொப்பரை உற்பத்தியை பெரும்பாலானவர்கள் கைவிட்டிருந்தனர். தற்போது, பருவமழை சீசன் துவங்கியுள்ள நிலையில், கொப்பரை உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளது.
இதனால், தேங்காய், கொப்பரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது கொப்பரை, தேங்காய், எண்ணெய் என அனைத்து விலையும் உயர்ந்துள்ளது.
கொப்பரை உற்பத்தியாளர் சங்க பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:
தேங்காய் சீசன் துவங்கியும், இந்தாண்டு கொப்பரை, தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது முழு சீசனாக இருந்தும், 40 சதவீதம் உற்பத்தி மட்டுமே உள்ளது.
வடமாநிலங்களில் தேங்காய் தேவை அதிகரித்துள்ளது; அரேபிய நாடுகளில், கொப்பரை, தேங்காய் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இதனால், கடந்த, மூன்று ஆண்டுகளாக, 80 ரூபாயை தாண்டாத கொப்பரை கிலோ விலை வேகமாக உயர்ந்து வருகிறது.
தற்போது, பருவமழை பெய்ய துவங்கியுள்ளதால் கொப்பரை உற்பத்தி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால், எதிர்பாராத விதமாக கொப்பரை உற்பத்தி செய்ய முடியவில்லை. இதனால், கொப்பரை கிலோ, 200 ரூபாயை கடந்துள்ளது.
காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி நேற்று, தேங்காய் எண்ணெய் (15 கிலோ டின்) 5,000 ரூபாய், ஒரு கிலோ தேங்காய் பவுடர், 275 ரூபாய்; முதல் தர கொப்பரை கிலோ, 210 ரூபாய், இரண்டாம் தர கொப்பரை, 205 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு டன் முதல் தர தேங்காய் (கறுப்பு) 66 ஆயிரம் ரூபாய்க்கும், இரண்டாம் தர (பச்சை) தேங்காய், 62 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது, சீசன் இல்லாத நேரத்தில் தேவை அதிகரிப்பால், விலை அதிகரித்துள்ளது.கொப்பரை விலை இதுவரை இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது. பண்டிகை காலங்கள் துவங்க உள்ள நிலையில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது. தேங்காய், கொப்பரை விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை.
இவ்வாறு, கூறினார்.