/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்பில் சிக்கிய நிலத்தை மீட்க முயற்சி 'ரிசர்வ் சைட்'டில் மாநகராட்சி பெயர் பலகை
/
ஆக்கிரமிப்பில் சிக்கிய நிலத்தை மீட்க முயற்சி 'ரிசர்வ் சைட்'டில் மாநகராட்சி பெயர் பலகை
ஆக்கிரமிப்பில் சிக்கிய நிலத்தை மீட்க முயற்சி 'ரிசர்வ் சைட்'டில் மாநகராட்சி பெயர் பலகை
ஆக்கிரமிப்பில் சிக்கிய நிலத்தை மீட்க முயற்சி 'ரிசர்வ் சைட்'டில் மாநகராட்சி பெயர் பலகை
ADDED : ஏப் 29, 2025 06:15 AM

கோவை மாநகராட்சி, 62வது வார்டு, கொங்கு நகரில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள, 10 சென்ட் பரப்பளவுள்ள 'ரிசர்வ் சைட்'டில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என பெயர் பலகை நேற்று வைக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், 62வது வார்டில், திருச்சி ரோடு அல்வேர்னியா பள்ளி எதிரே, கொங்கு நகரில், கோவை நகராட்சியாக இருந்த காலத்தில், 1972ல் ஸ்ரீவெங்கடேஸ்வரா கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் சார்பாக, எட்டு ஏக்கர், 49 சென்ட் பரப்பளவில், 84 மனைகள் உருவாக்கப்பட்டன.
பொது பயன்பாட்டுக்கான இடங்களாக, 70 சென்ட், 14 சென்ட் என பிரித்து, இரு இடங்களில், 'ரிசர்வ் சைட்' ஒதுக்கப்பட்டு வரைபடம் சமர்ப்பித்ததன் அடிப்படையில், சென்னை நகர ஊரமைப்பு துறை அனுமதி வழங்கியது. அவ்விடங்கள் நாளடைவில் ஆக்கிரமிப்பில் சிக்கின.
மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், கடந்தாண்டு மே மாதம், 39 சென்ட் நிலத்தை மீட்டெடுத்தனர். மீதமுள்ள இடங்களை மீட்டெடுக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஓராண்டுக்கு பின், மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த பிரபாகர், உதவி பொறியாளர் பிரகதீஸ்வரன் மற்றும் போலீசார், அப்பகுதிக்கு நேற்று சென்று, ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க முயன்றனர்.
ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால், 'மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என்கிற அறிவிப்பு பலகை மட்டும் வைத்து விட்டு திரும்பினர்.
இதே மனைப்பிரிவில், 30 அடி சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களையும் அகற்ற வேண்டியுள்ளது. தற்போது அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள இடம், 10 சென்ட் பரப்புள்ளது. இதன் மதிப்பு ஆறு கோடி ரூபாய் இருக்குமென நகரமைப்பு பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர்.
விரைவில் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தி, சுற்றிலும் கம்பி வேலி போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.