/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்தியாவில் குறைகிறது பருத்தி கையிருப்பு; இறக்குமதி வரியை குறைக்க கோருகிறது 'சைமா'
/
இந்தியாவில் குறைகிறது பருத்தி கையிருப்பு; இறக்குமதி வரியை குறைக்க கோருகிறது 'சைமா'
இந்தியாவில் குறைகிறது பருத்தி கையிருப்பு; இறக்குமதி வரியை குறைக்க கோருகிறது 'சைமா'
இந்தியாவில் குறைகிறது பருத்தி கையிருப்பு; இறக்குமதி வரியை குறைக்க கோருகிறது 'சைமா'
ADDED : ஜன 07, 2025 07:25 AM
கோவை; உள்நாட்டு பருத்தி கையிருப்பு குறைந்து வருவதால், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வரியை குறைக்க வேண்டும், என, தென்னிந்திய மில்கள் சங்கம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சைமா தலைவர் சுந்தர்ராமன், பொது செயலாளர் செல்வராஜ் கூறியதாவது:
இந்திய அளவில் தமிழ்நாட்டில் தான், அதிக நுால் மில்கள் உள்ளன(75 சதவீதம்). நாடு முழுவதும் உள்ள பஞ்சு மில்களின் தேவை ஆண்டுக்கு, 326 லட்சம் பேல்கள். இந்த ஆண்டு எதிர்பார்க்கும் அளவிற்கு பருத்தி விளைச்சல் இல்லை. 299 லட்சம் பேல்கள் தான் விளைச்சல் இருக்கும் என, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அரசின் பஞ்சு கையிருப்பு, 27 லட்சம் பேல்கள் மட்டும் தான் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்திய மில்களின் தேவைக்கு இவை, ஒரு மாதத்திற்கு மட்டுமே போதுமானது. 2010 ஆண்டில் குறைந்த பட்சம் இரண்டரை மாதங்களுக்கு, பருத்தி கையிருப்பு இருக்க வேண்டும் என அரசு கொள்கை முடிவு எடுத்தது. அதன் அடிப்படையில் தான், 55 லட்சம் பேல்கள் இருப்பில் இருந்தன.
11 சதவீதம் வரி விதிப்பு
இறக்குமதி பஞ்சின் மீதான வரி, குறைவாக இருந்தபோது 60 லட்சம் பேல்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், இறக்குமதியை குறைக்க, 2022ல் பஞ்சின் மீதான இறக்குமதிக்கு 11 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இந்திய பருத்தியின் விலையை விட, அதிகம் இருப்பதால் இறக்குமதி செய்ய மில்கள் சிரமத்துக்கு உள்ளாயின.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளது. தற்போது பேல் ஒன்றுக்கு 62 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
இவற்றை, இந்திய பருத்திக் கழகம் கொள்முதல் செய்து, 54 ஆயிரம் ரூபாய்க்கு நஷ்டத்திற்கு விற்பனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. இந்த ஆண்டில், ஜவுளி ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மில்களின் நஷ்டம் குறைந்துள்ளதால், லாபத்திற்கு வரவும் வாய்ப்புகள் உள்ளன.
இறக்குமதி வரி குறைக்கணும்
பருத்தியின் தேவை உயரும். எனவே, பருத்தி மீதான இறக்குமதி வரியை குறைத்தால், ஏற்றுமதி அதிகரிக்கும். வங்கதேச பிரச்னையால், ஏற்றுமதி வாய்ப்பையும் பெற முடியும்.
இறக்குமதி மீதான வரியை விளைச்சல் இல்லாத, கால அளவான ஏப்ரல் முதல் அக்., வரை அனுமதிக்க வேண்டும். விவசாயிகள் விற்பனை, பருத்திக் கழகத்தின் கொள்முதல் மார்ச்சில் முடிவடைந்து விடுகிறது.
எனவே, இறக்குமதி வரி குறைப்பால் விவசாயிகளுக்கு பாதிப்பு வராது. இது குறித்து, மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பேச்சு நடத்த உள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.