/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவறை செல்லும்போதும் கதவை திறந்து வைக்கணும்: 'டிஜிட்டல்' அரஸ்ட்டில் சிக்கிய தம்பதி மீட்பு
/
கழிவறை செல்லும்போதும் கதவை திறந்து வைக்கணும்: 'டிஜிட்டல்' அரஸ்ட்டில் சிக்கிய தம்பதி மீட்பு
கழிவறை செல்லும்போதும் கதவை திறந்து வைக்கணும்: 'டிஜிட்டல்' அரஸ்ட்டில் சிக்கிய தம்பதி மீட்பு
கழிவறை செல்லும்போதும் கதவை திறந்து வைக்கணும்: 'டிஜிட்டல்' அரஸ்ட்டில் சிக்கிய தம்பதி மீட்பு
ADDED : நவ 11, 2025 07:00 AM
கோவை: டிஜிட்டல் அரஸ்ட் செய்யப்பட்டதாக கூறி, வீட்டை விட்டு வெளியில் வராத வயதான தம்பதியை, போலீசார் அறிவுரை கூறி மீட்டனர்.
கோவை, ராமநாதபுரத்தை சேர்ந்த, 65 வயது முதியவரின் மொபைல்போனுக்கு அழைப்பு வந்தது.
எதிர்புறம் பேசியவர், மும்பை போலீஸ் உயர் அதிகாரி எனவும், பயங்கரவாதிகளுடன் முதியவருக்கு தொடர்பு இருப்பதாகவும்,வங்கிக்கணக்கு மூலம், பயங்கரவாதிகளுக்கு பலமுறை பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். வங்கி கணக்கை ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
வீடியோ காலில் அழைக்க அறிவுறுத்தியதால், முதியவர் வீடியோ கால் செய்தார். அதில், போலீஸ் சீருடை அணிந்த நபர் பேசினார். அவர் இருந்த இடம், போலீஸ் ஸ்டேஷன் போல், கைதிகள் அறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
அந்நபர், முதியவரை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக தெரிவித்தார். நீங்களும் வீட்டிலிருப்பவர்களும் வெளியே செல்லக்கூடாது. மீறினால் வீட்டை மறைந்திருந்து கண்காணிக்கும் போலீசார் சுட்டு விடுவர் என்றார்.
வீடியோ அழைப்பை துண்டிக்கக் கூடாது எனத் தெரிவித்த அந்நபர், கழிப்பறைக்கு சென்றாலும் கதவை அடைக்கக்கூடாது என மிரட்டினார். முதியவரும், மனைவியும் இரவு முழுவதும் துாங்காமல் தொடர்ந்து வீடியோ அழைப்பில் இருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் அந்நபர், முதியவரின் வங்கி கணக்கில் உள்ள ரூ.18.17 லட்சத்தை அனுப்ப உத்தரவிட்டார். இந்நிலையில், நீண்ட நேரம் முதியவரும், அவரது மனைவியும் வெளியில் வராததால் அருகில் குடியிருந்தவர்கள், ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு சென்ற போலீசார், நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. நீண்ட நேரத்துக்குப் பின் முதியவர் திறந்தார். நடந்த சம்பவத்தை அறிந்த போலீசார், டிஜிட்டல் கைது என்ற ஒன்று இல்லை என விளக்கினர். இதையடுத்து முதியவர் நிம்மதியடைந்தார்.
சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
டிஜிட்டல் அரஸ்ட் என, எதுவும் கிடையாது. யாரும் இதுபோன்று அழைப்புகளை நம்ப வேண்டாம். வீடியோ காலில் வரும் மோசடி ஆசாமிகள், நம்ப வைப்பதற்கு பல யுக்திகளை கையாள்வர். அவ்வாறு யாரும் பேசினால் நம்பாமல், அவர்களுடன் தைரியமாக பேச வேண்டும். அல்லது, அவர்களை தவிர்த்து விடலாம்.
டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளோம், பணத்தை அனுப்பினால் தான் விடுவிப்போம் என, மிரட்டினால் நம்பி பணத்தை அனுப்ப வேண்டாம். அவ்வாறு அழைப்பு வந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, போலீசார் கூறினர்.

