ADDED : நவ 17, 2026 07:27 PM
உடுமலை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வலியுறுத்தி, மா.கம்யூ., கட்சியினர் உடுமலை நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
உடுமலை நகராட்சி அலுவலகம், தளி மற்றும் குமரலிங்கம் பேரூராட்சி அலுவலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் இன்று (நவ.,17) நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும். இதில், 16வது நிதிக்குழு நிதியாக ரூ.20,054 கோடியையும், மாநில பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.29,863 கோடியையும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
நிதி பற்றாக்குறையால் நகராட்சி, பேரூராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகரச்செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார். தளியில் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜகோபால், குமரலிங்கத்தில், தாலுகா செயலாளர் வடிவேல் தலைமை வகித்தனர். மா.கம்யூ., நிர்வாகிகள், கட்சியினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
