ADDED : ஆக 08, 2026 04:21 AM
சைபர் குற்றங்களுக்கு எதிராகமுதல் 'ஸ்டாமிங் ஆப்பரேஷன்'
மாநகரில் கடந்த இரண்டு நாட்களில் சைபர் குற்றங்களில் தொடர்புடையவர்களைஸ்டாமிங் ஆப்பரேஷன் வாயிலாகபோலீசார் கைது செய்துள்ளனர். 'வங்கி கணக்குகளை கமிஷனுக்காக பிறரிடம் வாடகைக்கு விடுபவர்கள், சைபர் மோசடி கும்பலுக்கு ஏஜென்ட்களாக செயல்படுபவர்கள் உள்ளிட்ட 10 பேரை கைது செய்துள்ளோம். ஆப்பரேஷன் தொடர்வதால், மேலும் சிலர் கைதாக வாய்ப்புள்ளது' என்கின்றனர் அவர்கள்.
ஒருதலை காதல் தோல்வியால்கல்லூரி மாணவன் தற்கொலை
சுகுணாபுரம் இன்ஜி. கல்லூரி மாணவன் பிரணவ் பத்மதேவ், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சியை சேர்ந்தவர். இ.பி. காலனியில் 3 பேருடன் சேர்ந்து அறை எடுத்து தங்கியிருந்தார்.
வியாழன் அன்று 2 பேர் கல்லூரிக்கு சென்றுவிட்டனர். பிரணவ் தனி அறையில் இருந்தார். ஒருவர் வெளி அறையில் தூங்கி கொண்டிருந்தார். கல்லூரி முடிந்து வந்த இருவரும், பிரணவ் ஏன் வரவில்லை என கேட்டனர். அறை கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே பார்த்தனர். பிரணவ் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டனர்.
குனியமுத்தூர் போலீசார் விசாரித்தனர். பிரணவ் தன் மொபைல்போன், லேப்டாப்பில் குடும்ப சூழல், காதல் பிரச்னையால் வாழ பிடிக்கவில்லை; சாவுக்கு யாரும் காரணமல்ல என பதிவு செய்திருப்பதை பார்த்தனர். ஒருதலையாக காதலித்ததாக நண்பர்கள் தெரிவித்தனர்.
ரூ.60 லட்சம் மோசடி2 பேர் மீது வழக்கு
ஜி.என்.மில்ஸ் சேர்ந்த, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஜெகநாதன், 42 அளித்த நில மோசடி புகாரின் பேரில், துடியலுார் போலீசார் புரோக்கர் உட்பட, இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ரியல் எஸ்டேட் புரோக்கர் சரவணன் என்பவர், வெங்கடாசலபதி என்பவரை புகார்தாரருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். மற்றொரு நபருக்கு சொந்தமான நிலங்களை விற்க அதிகாரம் இருப்பதாக கூறி, போலி ஆவணங்களை காட்டி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளனர்.
ஜெகநாதன் கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரை வெங்கடாசலபதியின் வங்கி கணக்கிற்கு ஆர்.டி.ஜி.எஸ். மூலம் 10 லட்சமும், ரொக்கமாக 50 லட்சம் என மொத்தம் 60 லட்சம் ரூபாய் வழங்கியதாக கூறப்படுகிறது.
பணம் பெற்ற பின், நிலத்தை பதிவு செய்து கொடுக்காமலும், பணத்தை தராமலும் காலம் தாழ்த்தியுள்ளனர். பணத்தை திருப்பி கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துடியலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானவர் கைது ரத்தினபுரியில் தங்கி பணிபுரிந்துவந்த, மதுரை சூர்யா, 30 பொது, தனியார் சொத்துக்கு சேதம் விளைவிக்கும் குற்றப்பிரிவின் கீழ், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நிபந்தனை ஜாமினில் வெளியே சென்றார். 2025 நவ., முதல் நீதிமன்ற வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவானார். நீதிமன்ற உத்தரவின் பேரில், காந்திபுரம் பகுதியில் சுற்றித்திரிந்த சூர்யாவை போலீசார் கைது செய்தனர்.
நிலம் அபகரிக்க முயற்சி தி.மு.க நிர்வாகி மீது வழக்கு
ஜோதிபுரத்தை சேர்ந்த கதிர்வேல், 55 என்பவருக்கு சொந்தமாக 25 சென்ட் நிலம் எஸ்.ஐ.ஹெச்.எஸ்., காலனியில் உள்ளது. இந்நிலத்தில் தி.மு.க., பகுதி செயலாளர் சிங்கை பாலு மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் அத்துமீறி நுழைந்து அபகரிக்க மிரட்டுவதுடன், வேலி, கட்டுமான பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். நீதிமன்றத்தில் நேரடி வழக்கை கதிர்வேல் பதிவு செய்தார். சிங்கை பாலு, ஆனந்த் உள்ளிட்டோர் மீது சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இருசக்கர வாகனம் திருட்டுபோலீசார் விசாரணை
சித்தாபுதுார் சக்திவேல், தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் காலை காணவில்லை. புகாரின் பேரில், காட்டூர் போலீசார் அப்பகுதி சி.சி.டி.வி., பதிவுகளை சேகரித்து விசாரிக்கின்றனர்.
மொபைல்போன் திருட்டு இருவர் கைது
உக்கடம் பஸ் ஸ்டாண்டில் ஆந்திராவை சேர்ந்த, துர்கா பிரசாத், 35 என்பவர் பஸ்சில் ஏறும் போது, சட்டை பையில் இருந்த, மொபைல்போனை இருவர் பறித்து தப்பினர். பொதுமக்கள் வளைத்து பிடித்து, உக்கடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் நீலகிரி சிவக்குமார், 21 ராமநாதபுரம் விவேக், 36 என்பது தெரிந்து போலீசார் கைது செய்தனர்.
