ADDED : செப் 12, 2026 05:04 AM
ஆன்லைன் பகுதி நேர வேலை ஐந்து லட்சம் இழந்த இளைஞர்
கோவை: ஒத்தக்கால்மண்டபம் ஜோதி பிரகாஷ், ஆன்லைன் வாயிலாக பகுதி நேர வேலை தேடி வந்தார். அறிமுகமில்லாத நபர் தொடர்பு கொண்டு, ஆன்லைன் ரெவ்யூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி டெலிகிராமில் இணைத்துள்ளார். ஆரம்பத்தில், ரூ.500 முதல் 5000 வரை கொடுத்துள்ளார். பின்னர் முழுமையான பணம் கிடைக்க, தொடர்ந்து லட்சங்களில் பணம் கேட்டுள்ளனர். 5.1 லட்சம் ரூபாய் வரை அனுப்பிய பின்னர் சந்தேகம் ஏற்பட்டு, மேற்கொண்டு பணம் அனுப்புவதை நிறுத்தினார். சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
உரிமை கோராத வாகனங்கள் பறிமுதல் செய்த போலீஸ்
செல்வபுரம்: போலீசார் தொடர் கண்காணிப்பில், சொக்கம்புதுார் பகுதியில் உரிமை கோரப்படாமல் நிறுத்தப்பட்டு இருந்த, 8 வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாகன உரிமையாளர்கள் யார் என்று வட்டார போக்குவரத்து துறையினர் உதவியுடன் விசாரித்து, பின்னர் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.
புகையிலை பொருட்கள் விற்ற ஒருவர் கைது
துடியலுார்: போலீசார் ரோந்து பணியின் போது, பார் அருகே உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்து சோதனையிட்டனர். இதில், ஆறு கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, பெட்டிக்கடை உரிமையாளர் கவுதம் என்பவரை கைது செய்தனர்.
அடித்து புல்லட், போன் பறித்த மூவர் கைது
கோவை: மலுமிச்சம்பட்டி அடுத்து போடிபாளையம், தண்டி கவுண்டர் வீதி செந்தில்நாதன் என்பவர் தங்கியுள்ளார். கடந்த 9ல் இவரது சகோதரரின் கல்லூரி நண்பரான கிரிஷ் அருணாசலம், 19 வந்தார். அப்போது செந்தில்நாதன், 20, பிரவீன், 20 மற்றும் பவன் சைலேஷ், 18 அங்கிருந்தனர். மூவரும் கிரிஷ் அருணாசலத்திடம், பொள்ளாச்சியில் கல்லூரி நண்பர் நகை திருட்டு பற்றி கேட்டு கத்தியின் கைப்பிடியால் தலையில் தாக்கினர். புல்லட், போன் பிடுங்கி துரத்திவிட்டனர். கிரிஷ் அருணாசலம் புகாரில் மதுக்கரை போலீசார் விசாரித்து மூவரையும் கைது செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.
கஞ்சா விற்றவர் மீது 'குண்டாஸ்'
மதுக்கரை: மதுக்கரை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், 5.25 கி.கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த, வட மாநிலத்தை சேர்ந்த மோசம்குமார், 30, கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். எஸ்.பி., பவன்குமார், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மோசம்குமார் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் பவன்குமாருக்கு பரிந்துரைத்ததால், மோசம்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
