ADDED : அக் 17, 2026 05:19 PM
பைக் மோதி ஒருவர் பலி
கோவை: காந்திபார்க் – சுண்டபாளையம் சாலையில், வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று, சாலையில் நடந்து சென்ற, நாகராஜபுரம் வீரமணி மீது மோதியது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வீரமணி உயிரிழந்தார். போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
மத்திய சிறைக்குள் கஞ்சா
ரேஸ்கோர்ஸ்: துாத்துக்குடி சுரேஷ், கடந்த மே 9ம் தேதி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். குண்டர் சட்டத்தின் கீழும் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார். சிறைக்கு திரும்பியவரை சிறைகாவலர்கள், விரைவு அதிரடி படையினர் சோதனையிட்டனர். 24 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஜெயிலர் திருமலை அளித்த புகாரின்படி மீண்டும் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
