ADDED : நவ 29, 2026 09:45 PM
கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
காந்திபுரம் : ஆனைமலை ஜாவித் அகமது, 30; காந்திபுரத்துக்கு இரு தினங்களுக்கு முன் காரில் வந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்தவர் கார் மீது மோதினார். இதுகுறித்து ஜாவித் அகமது கேட்ட போது, பைக்கில் வந்தவர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்தார். காட்டூர் போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணையில், அவர் காந்திமாநகர் பிராங்க்ளின் கிறிஸ்டோபர், 31; காரில் இடித்து தகாத வார்த்தைகளால் திட்டியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மிரட்டிய இருவர் மீது வழக்கு
ரேஸ்கோர்ஸ் : அரசு கலைக் கல்லுாரி ரோட்டில் உள்ள அபார்ட்மென்ட்டில் குடியிருப்பவர் சிவசங்கர், 50. இவரது மகன் தற்கொலை செய்த வழக்கு ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் ஈரோடு விலாசபட்டி சிவகுமார் ஜாமின் பெற்றார். அவர் சில தினங்களுக்கு முன் சிவசங்கரின் அலுவலகத்துக்கு தனது உறவினர் அனுதர்ஷினியுடன் சென்று வழக்கை வாபஸ் பெற மிரட்டினர். சிவசங்கர் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார். ஜாமின் நிபந்தனைகளை மீறிய சிவகுமார் மீதும், மிரட்டல் விடுத்த அனுதர்ஷினி மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.
ரோடு சேதத்தால் தவறி விழுந்து பெண் பலி
போத்தனுார் : ஈச்சனாரி முத்துநகர் சுமா, 53 சில தினங்களுக்கு முன் கணவர் தேவநாயர், 58 உடன் போத்தனுார் கணேசபுரம் முத்துமாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். புதிய ரோடு போடும் பணிக்காக ரோட்டில் இருந்த இரும்பு கம்பியில் செருப்பு மாட்டிக் கொண்டதால் சுமா தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை விற்ற நான்கு பேர் கைது
சரவணம்பட்டி : சின்னவேடம்பட்டி சுண்ணாம்பு காலவாய் அருகே உள்ள பெட்டிக்கடையில் புகையிலைப் பொருட்கள் விற்ற புதுக்கோட்டை மணமேல்குடி சிவவடிவேல், 46 என்பவரை கைது செய்தனர். 5.104 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் ரத்தினபுரி, துடியலுார், சுந்தராபுரம் போலீசார் புகையிலை விற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை காரைக்குடி கவியரசன், 20, துாத்துக்குடி அச்சம்பாடு தெற்கு வீதி ஜெயா, 33, சிவகங்கை கொண்டையூர் நாகேந்திரன், 33 ஆகியோரை கைது செய்தனர்.
கஞ்சா விற்ற ஐந்து பேர் கைது
காந்திபுரம் : காட்டூர் போலீசார் காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தவரிடம் நடத்திய சோதனையில் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் மிசோரம் சர்கானை சேர்ந்த பிரான்சிஸ் மல்சாம்ம்கிமா, 20 எனத் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், சாய்பாபா காலனி, ராமநாதபுரம், குனியமுத்துார், சுந்தராபுரம், போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கெம்பட்டி காலனி ராஜன், 54, தர்மராஜா கோயில் வீதி கணேஷ், 51, புலியகுளம் முத்துகிருஷ்ணன், 31, செல்வபுரத்தில் குடியிருக்கும் சென்னை ஆவடி ஹரிஹரசுதன், 23, சிட்கோ, பிள்ளையார்புரம் சதீஸ்குமார், 40 ஆகியோரை கைது செய்தனர்.
விபச்சார புரோக்கர் கைது
ரேஸ்கோர்ஸ் : சென்னை வேப்பம்பட்டு வரதராஜபுரத்தை சேர்ந்தவர் தீபக், 37. ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சந்தித்த நபர் பெண்கள் இருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து தீபக் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் அந்நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அஸ்ஸாம் டின்சுகியாவை சேர்ந்த ஹோரேந்திரா சுங்கிராங், 19 எனத் தெரிந்தது. அவர் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வது தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
மது குடித்த 19 பேர் கைது
கோவை : பொது இடங்களில் மது குடிப்பவர்கள் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று மாநகர எல்லைக்குட்பட்ட, 19 போலீஸ் ஸ்டேஷன்களில், 19 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மது விற்றவர்கள் கைது
காந்திபுரம் : காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கிராஸ்கட் ரோடு, 3வது வீதியில் மது விற்ற சிவகங்கை சேவாவூரணி ஜோசப், 41 என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 72 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் கவுண்டம்பாளையம் போலீசார் பூவாத்தாள், 65, சரளா, 63, சிங்காநல்லுார் போலீசார் சிவகங்கை இளையான்குடியை சேர்ந்த குருபாண்டியன், 29, பீளமேடு போலீசார் சவுரிபாளையம் மோகன் ஆகியோரை கைது செய்தனர்.
சரவணம்பட்டி போலீசார் தஞ்சாவூர் திருவோணத்தை சேர்ந்த சுப்பு, 27, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சுந்தராபுரம் ராஜசேகரன், 48 ஆகியோரை கைது செய்தனர்.
போதை மாத்திரைகள் பறிமுதல்; இருவர் கைது
கரும்புக்கடை: கரும்புக்கடை போலீசார் ஆசாத் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்குள்ள மைதானத்தில் இருவர் நின்றிருந்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகள், கஞ்சா இருந்தது. விசாரணையில், அவர்கள் கரும்புக்கடை சாரமேடு அணீஸ் ரஹ்மான், 26, சஞ்சய், 24 எனத் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 53 போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
