UPDATED : ஜூலை 26, 2026 08:49 PM
ADDED : ஜூலை 26, 2026 08:11 PM
கவுண்டம்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கஞ்சா உட்பட போதை பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்து வந்த கிஷோர், 22, மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கவுண்டம்பாளையம் இன்ஸ்பெக்டர் பரிந்துரையின் பேரில், 'மருந்து சரக்கு குற்றவாளி' என கருதி, கோவை போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின்படி, கிஷோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கஞ்சா வைத்திருந்தவர் கைது
சூலுார் அடுத்த சிந்தாமணிபுதூர் டோல்கேட் அருகே, சூலுார் போலீசார் ரோந்து சென்றனர். சந்தேகத்தின் பேரில், அங்கிருந்த, கேரள மாநிலம் பொன்னானியை சேர்ந்த பல்லடம் லட்சுமி மில்ஸ் பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் முசாமீன், 23 என்பவரிடம் நடத்திய சோதனையில், ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
போதை பொருட்கள் பறிமுதல்: மூவர் கைது
கவுண்டம்பாளையம் போலீசார் மேட்டுப்பாளையம் ரோடு, எரு கம்பெனி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த முருகன், 58, தடை செய்யப்பட்ட போதை வஸ்துகளை விற்பனைக்காக வைத்திருந்தார். போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, முருகனை கைது செய்தனர்.
* துடியலுார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், வடமதுரை, வி.எஸ்.கே., நகர், வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி ரோடு ஆகிய பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது, பரமேஸ்வரன், 54, முகேஷ், 24, ஆகியோர், தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
கத்திக்குத்து: வழக்குப்பதிவு
கவுண்டம்பாளையம் அருகே, உடையாம்பாளையம், அப்பநாயக்கன்புதுாரை சேர்ந்தவர் ராஜ்குமார், 50. இவரிடம், சங்கனுாரை சேர்ந்த அருண்குமார், 38, மீன் தொட்டியை சுத்தம் செய்ய கொடுத்திருந்தார். சுத்தம் செய்த பின் கட்டணம், 2,000 ரூபாய் என கூறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அருண்குமார், ராஜகுமாருக்கு மிரட்டல் விடுத்து, அவரை தாக்கி, கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தினார். கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கிணற்றில் மூழ்கி மாணவன் பலி
சூலுார் பி.கே.டி., நகரை சேர்ந்தவர் செந்தில் பிரபு. இவரது மகன் விசாகன், 15. பல்லடம் அருகே உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று, நண்பர்களுடன் சேர்ந்து அப்பநாயக்கன்பட்டியில், தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க உள்ளே இறங்கினர். நீச்சல் தெரியாமல், நீரில் மூழ்கி விசாகன் உயிரிழந்தான். சூலுார் தீயணைப்பு நிலைய வீரர்கள், மாணவனின் சடலத்தை மீட்டனர். சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
