UPDATED : ஜூலை 30, 2026 10:39 PM
ADDED : ஜூலை 30, 2026 08:12 PM
ஆர்.எஸ்புரம்: ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர், ராஜா, 41. பிரிண்டிங் கடையில் பணிபுரிகிறார். பணியில் இருந்த போது, இடையர்பாளையத்தை சேர்ந்த முருகபூபதி, 37 தன் மீதுள்ள பழைய வழக்குகளில் சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டினார். புகாரின்பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
மர்மமான முறையில் ஆடுகள் உயிரிழப்பு
செல்வபுரம்: சொக்கம்புதுாரில், தனியார் கார் பார்க்கிங் பின் பகுதியில், 3 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. விலங்குகள் வதை தடுப்புச் சங்க அலுவலர் பாலகிருஷ்ணன் புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பேக்கரி ஷட்டர் உடைத்து திருட்டு
காந்திபுரம்: கிராஸ்கட் ரோட்டில், பேக்கரி நடத்துபவர் கலீல் ரகுமான், 55. கடையை 28 ம் தேதி இரவு பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை, அஜீத்குமார் என்பவர் பேக்கரி கதவு சேதமடைந்து திறந்து கிடப்பதாக கூறினார். கலீல் ரகுமான் வந்து பார்த்த போது, கதவு, கல்லா பெட்டி, சி.சி.டி.வி., உள்ளிட்டவை அடித்து சேதப்படுத்தப்பட்டு இருந்தது. கல்லாவில் இருந்த, ரூ.6000 ரூபாய் திருடப்பட்டது தெரிந்தது. காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
எலக்ட்ரானிக் பொருட்கள் கொள்ளை
காந்திபுரம்: கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன், 42, ராம்நகரில் மொபைல் கடை நடத்தி வருகிறார். 28 ம் தேதி கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றவரை, கடையின் கட்டட உரிமையாளர் அழைத்து, ஷட்டர் உடைந்துள்ளதாக தெரிவித்தார். உடனடியாக வந்து பார்த்தபோது, பழைய மொபைல்போன்கள், டிஜிட்டல் வாட்ச் உள்ளிட்ட ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்பனை; ஐந்து பேர் கைது
உக்கடம்: பெரியகடை வீதி போலீசார் ரோந்து பணியின் போது, புல்லுக்காடு பகுதியில் உள்ள காலியிடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தவர்களிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், எச்.எஸ்., காலனியை சேர்ந்த மணிகண்டன், 28 கெம்பட்டிகாலனி அபிஷேக் தபா, 23 ,மேற்கு வங்கத்தை சேர்ந்த நசீர் அலி, 45 துர்கர் சாமக்குளம் விபின் சிங்க், 25 பீகார் அமீத்சானி, 18 என்பதும் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. தொடர்ந்து, 1.550 கிலோ கஞ்சா, ரூ.25 ஆயிரம், 4 மொபைல் போன், 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
* திருச்சி ரோட்டில் கஞ்சா விற்ற நவீன் ,27 என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 1.150 கிலோ கஞ்சாவை ரேஸ்கோர்ஸ் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தென்னை மரம் விழுந்து மூதாட்டி பலி
தொண்டாமுத்தூர் : புத்தூர், வடக்கு வீதியை சேர்ந்தவர் பார்வதி, 65. விவசாய கூலி தொழிலாளி. நேற்று காலை, தொண்டாமுத்தூர், வாய்க்கால் வழிச்சாலையில் உள்ள தோட்டத்தில், களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, பலத்த காற்று வீசியதில் அங்கிருந்த தென்னை மரம் வேரோடு சாய்ந்து அவர் மீது விழுந்தது. இதில், உடல் நசுங்கி அவர் உயிரிழந்தார். தொண்டாமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
