மது குடிக்க வர மறுத்தவரை கொல்ல முயற்சி; ஒருவர் கைது
மது குடிக்க வர மறுத்தவரை கொல்ல முயற்சி; ஒருவர் கைது
UPDATED : ஆக 19, 2026 08:33 PM
ADDED : ஆக 19, 2026 08:30 PM
குனியமுத்தூர்: ராஜ நாயக்கர் தோட்டத்தை சேர்ந்தவர் காஜா ஹுசேன், 37. 17ம் தேதி மாலை குனியமுத்தூர் பஸ் ஸ்டாப் அருகேயுள்ள பாரில் மது குடித்த இவர் பாலக்காடு சாலையில் நடந்து சென்றார். அப்போது ஒருவர் இவரை மது குடிக்க அழைத்தார். மறுத்த காஜா ஹுசேன் தொடர்ந்து நடக்க துவங்கினார்.
அங்குள்ள ஒரு காலியிடம் அருகே செல்லும்போது, மது குடிக்க அழைத்த நபர் மீண்டும் வந்து, கத்தியை காட்டி மிரட்டி, தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரை கீழே தள்ளி அங்கிருந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொல்ல முயன்றார். தலையில் காயமடைந்தவரை அங்கிருந்தோர் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். காஜா ஹுசேன் புகாரில், குனியமுத்தூர் போலீசார் விசாரித்து, குனியமுத்தூர், திருநகர் காலனியை சேர்ந்த கார்த்திக் ராஜா, 31 என்பவரை கைது செய்தனர்.
கொடுக்கல் வாங்கலில் தகராறு:மூன்று பேர் மீது வழக்கு
வடவள்ளி: தொண்டாமுத்துாரை சேர்ந்த மதியழகன், 37 தொழில் காரணங்களுக்காக பத்மநாபன், ராஜேஷ்குமார், முருகதாஸ் ஆகியோருக்கு ரூ.7 லட்சம் கொடுத்துள்ளார். இதில் மனக்கசப்பு ஏற்பட்டதால் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ரூ.4.50 லட்சம் திருப்பி தந்த நிலையில், மீதமுள்ள பணத்தை கேட்டதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அஜ்ஜனுார் பகுதியில், மதியழகனை மூன்று பேரும் தாக்கியுள்ளனர். புகாரின் பேரில், வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
அடமானம் வைத்த கார் தரமறுத்ததால் புகார்
சரவணம்பட்டி: சரவணம்பட்டி மகேந்திரன், 39 அவசர மருத்துவ தேவைக்காக தனது காரை, சின்னவேடம்பட்டி நந்தகுமார், 28 என்பவரிடம் அடமானம் வைத்து பணத்தை கடனாக பெற்றுள்ளார். பணத்தை வட்டியுடன் திரும்பி செலுத்திய பிறகும் காரை தரமறுத்து மிரட்டியதால், மகேந்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணை அடிப்படையில், நந்தகுமாரை கைது செய்தனர்.
இருசக்கர வாகனம் திருட்டு போலீசார் விசாரணை
காந்திபுரம்: நியூ சித்தாபுதுார் வெங்கிட்டசாமி சாலையில் வசிப்பவர் ராஜசேகர், 28. இவர். தனது வாகனத்தை தான் தங்கி இருந்த மேன்ஷன் முன் நிறுத்தி சென்றுள்ளார். மறுநாள் காலையில் வாகனம் திருடு போயிருந்தது. காட்டூர் போலீசில் புகார் அளித்தார். விசாரிக்கின்றனர்.
வங்கியில் பணம் செலுத்திய பெண்ணிடம் போன் பறிப்பு
பீளமேடு: ஹோப்காலேஜ் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் பெருமாள், 37. அலுவலக பணத்தை அதே பகுதியில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு வந்தபோது, காரில் வந்த நபர் ஒருவர் அவர் கையில் இருந்த போனை பறித்து தப்பிச்சென்றுள்ளார். புகார் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.
14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அக்பர் அலி, 24 புகையிலை பொருட்களை கோவை ரயில்வே ஸ்டேஷன் முன் பதுக்கி வைத்திருந்ததை ரோந்துக்கு வந்த, ரேஸ்கோர்ஸ் போலீசார் கண்டுபிடித்தனர். 14 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் யாருக்கு கொடுக்க காத்திருந்தார், இதற்கு முன் யாருக்கெல்லாம் கப்ளை செய்துள்ளார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
