ADDED : ஆக 24, 2026 09:01 PM
மொபைல்போன் திருட்டு குனியமுத்துார்: திருநாவுக்கரசு நகரிலுள்ள தனியார் தொழிற்சாலை குடோனில் சோட்டிலால், பவன்குமார் ஆகியோர் பணிபுரிகின்றனர். 22ம் தேதி மதியம் இருவரும் தங்களது மொபைல்போன்களை குடோனுக்கு வெளியே சார்ஜ் போட்டுவிட்டு, சாப்பிட சென்றனர். திரும்பி வந்த போது போன்களை காணவில்லை. தொழிற்சாலை மனிதவள பிரிவு மேலாளர் ஹரிஹரன், குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். விசாரித்த போலீசார், பி.கே.புதூர், மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்த அப்பாஸ், 47 என்பவரை கைது செய்தனர்.
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது மதுக்கரை : சுந்தராபுரம் போலீசார் நேற்று முன்தினம் மதுக்கரை மார்க்கெட் ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரோந்து சென்றார். போலீசாரை பார்த்த நான்கு பேர் தப்பியோடினர். இருவரை பிடித்து விசாரித்தபோது, பொள்ளாச்சி, புரவிபாளையம், கவிதாசன், 21, மதுக்கரை, காந்தி நகர், யுவராஜ், 21 என்பதும், விற்பனைக்காக, 100 கிராம் கஞ்சா வைத்திருப்பதும் தெரிந்தது. தப்பியோடியது ஜேம்ஸ் சந்தோசம், வேல்பாண்டி என தெரிந்தது. தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை ரத்தினபுரி: போலீசார் ரோந்து சென்றபோது, அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. பறிமுதல் செய்து, உரிமையாளர் நடராஜ், 55 என்பவரை கைது செய்தனர்.
செல்வபுரம்: சிவாலயா ஜங்ஷன், தனியார் பேக்கரி பின்புறம் புகையிலை பொருட்களை விற்ற அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மது அருந்தினால் நடவடிக்கை பொது இடங்களில், குடிப்பவர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்கின்றனர். சிலர் குற்ற செயல்பாடுகளிலும் ஈடுபடுவதால், போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அதன்படி, நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். பொது இடங்களில் அமர்ந்து மது அருந்திய பிரிவில், 56 வழக்குகள் பதிந்து 70 பேரை கைது செய்தனர்.
ஒரே நாளில் ரூ.86 லட்சம் மோசடி
* கோவையை சேர்ந்தவர் பாரதிராஜா. சமூகவலைத்தளம் மூலம் அறிமுகமான சிலர் பங்குச்சந்தையில் அதிக லாபம் எடுக்கலாம் என கூறினர். லாபம் பெற்றவர்கள் போல் அதே கும்பலை சேர்ந்த சிலரும் அவரிடம் பேசி முதலீடு செய்ய வைத்தனர். பல கட்டங்களாக ரூ.39.93 லட்சம் வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார். தொடர்ந்து லாபம், முதலீட்டு தொகையை எடுக்க முயன்ற போது எடுக்க முடியவில்லை. சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
* பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தாமோதரன் பங்கு சந்தையில் முதலீடு செய்ய விரும்பினார். அதை தெரிந்த, மர்மநபர்கள் சிலர் டிரேடிங் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தினர். முதலீட்டுக்கு அதிக லாபம் கிடைப்பது போல் செயலியில் காட்டப்பட்டது. அதை நம்பி, ரூ.17.57 லட்சம் பல கட்டங்களாக மோசடி நபர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார். ஏமாற்றப்பட்டது தெரிந்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
* சூலுாரை சேர்ந்த இளங்கோ ஆன்லைன் முதலீடு ஆசையில் மர்மநபர்கள் கூறியதை நம்பி ரூ.21.31 லட்சத்தை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி பணத்தை இழந்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், ஒத்தக்கால்மண்டபம் சுரேஷ், ரூ.7 லட்சத்தை மோசடி நபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி பணத்தை இழந்து புகார் பதிவு செய்துள்ளார்.
