ADDED : ஆக 28, 2026 07:14 PM
கொலை மிரட்டல்
போலீசார் விசாரணை
சின்னவேடம்பட்டி முத்துச்செல்வி குடும்பத்தாருக்கும் பக்கத்து வீட்டாருக்கும் கருத்துவேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. 22ம் தேதி இரவு முத்துச்செல்வி தனது கணவர் மற்றும் ஆறு வயது குழந்தையுடன், வீட்டின் முன் பேசிக்கொண்டு இருந்தார். பக்கத்து வீட்டு கேசவன் திடீரென அரிவாளுடன் வந்து கணவரை தாக்க முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஒரு வாகனம் சேதமடைந்தது. கேசவன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
டிரைவருக்கு நெஞ்சுவலி
பள்ளி வாகனம் விபத்து
தனியார் பள்ளி வாகன ஓட்டுநர், சண்முகசுந்தரம். நேற்று முன்தினம் பள்ளி மாணவர்களை வீடுகளில் இறக்கிவிடும் பணியில் ஈடுபட்டு இருந்தார். இருகூர்– ஒண்டிபுதுார் பாலம் மேல் சென்றபோது திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நிலைதடுமாறிய அவர் வாகனத்தை பாலத்தின் ஓரம் நிறுத்தினார். அப்போது, வாகனம் தடுப்பில் உரசி உள்ளது. வாகனத்தில் பள்ளி மாணவர்கள் இருவர், ஆசிரியர்கள் பாதுகாப்பாக இருந்தனர். 108 ஆம்புலன்ஸ் குழுவினர் பரிசோதித்து உயிரிழந்தாக தெரிவித்தனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை
4 வழக்குகள் பதிவு
* துடியலுார் போலீசார் ரோந்து பணியின் போது, கே.என்.ஜி. புதுாரில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்து சோதனையிட்டனர். சோதனையில், விற்பனை செய்வது உறுதிசெய்து, ராமநாதபுரம் முருகானந்தம் என்பவரை கைது செய்தனர்.
* குனியமுத்துார் போலீஸ், சுகுணாபுரம் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த, போத்தனுார் பக்ரூதீன் என்பவரை கைது செய்தனர்.
* பீளமேடு போலீசார் வி.கே. சாலையில் மளிகை கடை உரிமையாளர் ராம்குமார் என்பவரையும், சவுரிபாளையம் பஸ் ஸ்டாப் எதிரே உள்ள பெட்டிக்கடை உரிமையாளர் பாலாஜி என்பவரையும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததற்காக கைது செய்தனர்.
இருசக்கர வாகனம் திருட்டு சலிவன் வீதியை சேர்ந்த, மருதுபாண்டி தனது இரண்டு சக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி சென்றார். மறுநாள் காலையில் வாகனம் இல்லை. வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின்படி, சி.சி.டி.வி., பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
