UPDATED : அக் 21, 2026 08:01 PM
ADDED : அக் 21, 2026 07:58 PM
கஞ்சா விற்றவர் கைது
பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட இடிகரை, கேஸ் கம்பெனி ரோட்டில் ரயில்வே பாலம் அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் பிடித்து, விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அவர் பெயர் அர்ஜுன்குமார்,23. பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தை சேர்ந்தவர் என, தெரியவந்தது. பாணி பூரி விற்கும் தொழில் செய்து கொண்டு, கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து, 1200 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அர்ஜுன்குமார், சிறையில் அடைக்கப்பட்டார்.
மிரட்டி பணம் பறித்தவர் கைது
துடியலூர் அருகே உள்ள ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் மைக்கேல்,56; எலக்ட்ரீசியன். இவர் துடியலூர் இடிகரை ரோட்டில் அரசு கால்நடை மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர், கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த, 1200 ரூபாயை பறித்துக் கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், மைக்கேலிடம் வழிப்பறி செய்தவர் கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரெஜினால்டு,38, என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
