
மூன்று வாகனங்கள் மோதல்; ஒருவர் பலி
வெள்ளலூர் மகாலிங்க புரத்தை சேர்ந்த கணேசன் மகன் குப்புராஜ், 32. தண்ணீர் லாரி டிரைவர். நேற்று மதியம், 12:00 மணிக்கு, தண்ணீர் லாரியை நீலம்பூர் பை -பாஸ் ரோட்டில் ஓட்டி சென்றார்.
பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, எதிரே வந்த கன்டெய்னர் லாரி, தண்ணீர் லாரி மீது மோதியது. இதில் தண்ணீர் லாரி பின்னால் வந்த மினி டெம்போ மீது மோதி கவிழ்ந்து.
இந்த விபத்தில், குப்புராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். டெம்போ டிரைவரான தர்மபுரியை சேர்ந்த சபரீஸ்வரன், 28, காயமடைந்தார். போலீசாரும், மக்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுகுறித்து கன்டெய்னர் லாரி டிரைவர் நாராயணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பைக் மோதி பெண் பலி
அன்னூர், கோவை சாலையில், எல்லப்பாளையம் பிரிவில், கடந்த மார்ச் 1ம் தேதி ஆண்டிச்சி பாளையம் சிவக்குமார் மனைவி மதுமிதா, 20 என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேகமாக வந்த பைக், மதுமிதா மீது மோதியது. படுகாயம் அடைந்த மதுமிதா கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அருகில் இருந்தவர்கள் பைக்கை பரிசோதித்த போது அதிலிருந்த பையில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. பைக்கை ஓட்டி வந்தவர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். பைக்கில் அமர்ந்திருந்த மற்றொருவரான அஸ்ஸாமை சேர்ந்த அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுமிதா சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றவரை தேடி வருகின்றனர்.

