நகை திருடிய தொழிலாளி கைது
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே சின்னக்கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் அர்ச்சுனன், 57. இவரது மனைவி ருக்குமணி, 52. இவர்கள் இருவரும் அன்னூர் அருகே கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனி நபருக்கு சொந்தமான தோட்டத்தில், தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர். விடுமுறை கிடைக்கும் போது மட்டுமே சிறுமுகையில் உள்ள வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர்.
இதனிடையே கடந்த 22ம் தேதி சிறுமுகையில் உள்ள வீட்டை பூட்டி விட்டு சென்ற தம்பதி, நேற்று முன் தினம் காலை மீண்டும் வந்தனர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டே கால் சவரன் தங்க நகைகள், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு திருட்டு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு அர்ச்சுனன் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில், அர்ச்சுனன் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வந்த சென்ட்ரிங் தொழிலாளி செந்தில், 45, என்பவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்த போலீசார், திருட்டு போன தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
---புரோட்டா மாஸ்டர் தற்கொலை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் தினேஷ், 35. புரோட்டா மாஸ்டர். இவர் தற்போது கோவை மாவட்டம் காரமடையில் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வருகிறார்.
இதனிடையே தினேஷ், கடந்த ஆறு மாதத்திற்கு முன் கீழே விழுந்து காலில் அடிப்பட்டதில், எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் தங்கியவாறு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மன உளைச்சலில் தினேஷ் இருந்துள்ளார். கணவன், மனைவியிடையே அடிக்கடி சண்டையும் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முன் தினம் காலை தினேஷின் மனைவி கோபித்துக்கொண்டு வீட்டில் தூக்கு போட முயன்றார். அவரை மீட்ட உறவினர்கள், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது வீட்டில் இருந்த தினேஷ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரமடை போலீசார், விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.--