கடையில் திருடியவர்கள் சிறையில் அடைப்பு
சூலூரில் சிக்கன் கடையை உடைத்து பணம் திருடிய இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சூலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் ஸ்ரீ தரன் என்பவருக்கு சொந்தமான சிக்கன் கடை உள்ளது. கடந்த, 20 ம்தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் கடையை திறக்க வந்தபோது, கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே டேபிளில் இருந்த, பணம் திருடப்பட்டு இருப்பது தெரிந்தது. இதுகுறித்து அவர் சூலூர் போலீசில் புகார் அளித்தார். கண்காணிப்பு காமிரா காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டனர். திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சூலூர் மதியழகன் நகரை சேர்ந்த மகாமணி, 21, வெங்கடேஷ், 27 ஆகிய இருவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
3 கிலோ கஞ்சா பறிமுதல்
காரமடை அருகே மூன்று கிலோ எடையுள்ள கஞ்சா வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சின்னமத்தம்பாளையம் கண்ணார்பாளையம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஒடிசா மாநிலம், பலராம் பலதா,35, கைது செய்து, அவரிடமிருந்து மூன்று கிலோ, 200 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பலராம் பலதா, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

