/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எல்லை தாண்டி ஆக்கிரமிப்பு நடைபாதை மாயம்; அதிகாரிகள் உறக்கம்!
/
எல்லை தாண்டி ஆக்கிரமிப்பு நடைபாதை மாயம்; அதிகாரிகள் உறக்கம்!
எல்லை தாண்டி ஆக்கிரமிப்பு நடைபாதை மாயம்; அதிகாரிகள் உறக்கம்!
எல்லை தாண்டி ஆக்கிரமிப்பு நடைபாதை மாயம்; அதிகாரிகள் உறக்கம்!
ADDED : மே 28, 2025 11:38 PM

- நிருபர் குழு -
வளர்ந்து வரும் நகரங்களுக்கு, போக்குவரத்து நெரிசல் முட்டுக்கட்டை போடுகிறது. நெரிசலுக்கு காரணம், ஆக்கிரமிப்புகள் என்பதே எதார்த்தமான உண்மை. ஆக்கிரமிப்பு, போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட சம்பவங்களால், நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
* பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோடு, கடை வீதி, ராஜாமில்ரோடு, சத்திரம் வீதி, மார்க்கெட் ரோடு போன்ற பகுதிகளில் வணிக கடைகள் நிறைந்திருந்தாலும், மக்கள் பாதுகாப்புடன் நடந்து செல்ல நடைபாதை கிடையாது.
அதேநேரம், பஸ் ஸ்டாண்ட், உடுமலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதை அமைக்கப்பட்டாலும், கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பு மட்டுமே காணப்படுகிறது. நடைபாதையில் பெயர் பலகை வைப்பது, கடையில் உள்ள பொருட்களை நடைபாதை வரை விரிவுபடுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதுதவிர, அனுமதிக்கு மாறாக, தள்ளுவண்டி கடைகளும் நடைபாதையிலேயே அமைக்கப்படுகிறது. அங்கேயே உணவு தயாரித்து விற்பதுடன், மீதமாகும் கழிவுகள் முறையாக அகற்றாமல் இருப்பதால், பாதசாரிகள் பரிதவிக்கின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், பாதசாரிகளுக்கு பாதையே இல்லை.
* கிணத்துக்கடவில், பிரதான ரோட்டிலும், ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. பாதசாரிகளுக்காக அமைக்கப்பட்ட நடைபாதை முழுக்க கடைகளின் ஆக்கிரமிப்பே உள்ளது.
சர்வீஸ் ரோட்டின் இரு பகுதிகளிலும் உள்ள பூக்கடை, பழக்கடை, பழைய பொருட்கள் சேகரிப்பு கடை, மளிகை கடை, பேக்கரி என, பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். மேலும், விளம்பர போர்டுகள், பொருட்கள் வைத்து, நடைபாதையை ஆக்கிரமித்துள்ளனர்.
* வால்பாறையில், மக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனர். வால்பாறை மார்க்கெட் செல்லும் ரோட்டை ஆக்கிரமித்தும், நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஆக்கிரமித்தும் அதிகளவில் கடைகள் அமைத்துள்ளனர்.
பெரும்பாலான கடைகள் ஆளும்கட்சியினர் ஆதரவில் வைக்கப்பட்டுள்ளதால், கடைகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
குறுகலான ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், மக்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ஆக்கிரமிப்புக்கடைகளை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டாலும், துறை சார்ந்த அதிகாரிகள் மவுனம் சாதிக்கின்றனர்.
கணக்கு காட்டுறாங்க!
கோர்ட் உத்தரவிட்டால் மட்டுமே, ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது. ஆனால், ஒரு சில நாட்களிலேயே ஆக்கிரமிப்பு கடைகள் மீண்டும் முளைக்கின்றன. ஆக்கிரமிப்பாளர்கள் பின்னணியில் அரசியல் பின்புலம் இருப்பதால், அதிகாரிகளும் அமைதியாகி விடுகின்றனர்.
வளர்ந்து வரும் நகரில் அதற்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தாதது; ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம், திட்டங்கள் செயல்பாடில்லாதது போன்ற காரணங்களினால், மக்களே பெரிதும் பாதிக்கின்றனர். ஆக்கிரமிப்பாளர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளும் பிரச்னையை உணர்ந்தால் தான் ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.