/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேங்கும் கழிவுநீரால் பாதிப்பு: கால்வாயை சீரமைப்பதே தீர்வு
/
தேங்கும் கழிவுநீரால் பாதிப்பு: கால்வாயை சீரமைப்பதே தீர்வு
தேங்கும் கழிவுநீரால் பாதிப்பு: கால்வாயை சீரமைப்பதே தீர்வு
தேங்கும் கழிவுநீரால் பாதிப்பு: கால்வாயை சீரமைப்பதே தீர்வு
ADDED : நவ 27, 2024 09:33 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட் அருகே, சர்வீஸ் ரோட்டோரத்தில் கழிவு நீர் தேங்கி, வழிந்து ஓடுகிறது.
கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சர்வீஸ் ரோடு வழியாக, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இதில், தினசரி மார்க்கெட் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது.
இந்த கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் சர்வீஸ் ரோட்டில் வழிந்து ஓடுகிறது. இதனால், ரோட்டில் பயணிக்கும் வாகனங்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதுடன், ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது, கழிவு நீர் தெறிப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தினசரி மார்க்கெட் அருகே, ஆவின் பாலகம் மற்றும் பஸ் ஸ்டாண்ட், கடைகள் உள்ளிட்டவை இருப்பதால் அப்பகுதியில் சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், கால்வாயில் தண்ணீர் தேங்கியே இருப்பதால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு நோய் தொற்று ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது.
கழிவு நீர் ரோட்டில் வழிந்து ஓடும் போதெல்லாம், பேரூராட்சி பணியாளர்கள் தற்காலிகமாக சரி செய்கின்றனர். இருந்தாலும் ரோட்டில் கழிவு நீர் 200 மீட்டர் தொலைவுக்கு செல்வதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, வாகன ஓட்டுனர்கள் மற்றும் மக்கள் நலன் கருதி கால்வாயை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் கூறுகையில், 'சர்வீஸ் ரோட்டில், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்து ஓடுகிறது. கால்வாய் அடைப்பை சரி செய்து கழிவுநீர் கால்வாய் சேதமடைந்துள்ள பகுதியை முறையாக சீரமைத்து, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.