/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சுவர் விளம்பரங்களால் ஆபத்து
/
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சுவர் விளம்பரங்களால் ஆபத்து
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சுவர் விளம்பரங்களால் ஆபத்து
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சுவர் விளம்பரங்களால் ஆபத்து
ADDED : மே 06, 2025 11:18 PM
வால்பாறை: அரசு சுவர்களில் விதிமுறையை மீறி எழுதப்பட்டுள்ள விளம்பரங்களை உடனடியாக அழிக்க வேண்டும், என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை வக்கீல் சங்க செயலாளரும், இயற்கை ஆர்வலருமான பெருமாள், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் உள்ள, 27வது கொண்டை ஊசி வளைவு வரை வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கோடை காலங்களில் வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக கொண்டைஊசி வளைவுகளில், இயற்கை அமைப்பின் சார்பில் சிமென்ட் தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பி வந்தோம். தற்போது இந்த பணியை வனத்துறை ஊழியர்களே செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான மலைப்பாதையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் சேகரித்து அப்புறப்படுத்தி உள்ளோம். மலைப்பாதையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், இருபுறமும் உள்ள தடுப்பு சுவர்களில் பல்வேறு அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்துள்ளனர்.
இந்த விளம்பரங்கள் அனைத்தும் ரசாயனம் கலந்த வண்ணங்களை கொண்டு எழுதபட்டுள்ளன. இது தவிர வனப்பகுதியில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. சுவரொட்டிகள் ஒட்ட பயன்படுத்தும் பசையில் ரசாயனம் கலக்கபட்டுள்ளது. இவற்றை வன விலங்குகள் உட்கொண்டாலோ, சுவர் விளம்பரத்தில் உள்ள ரசாயனம் மழை நீரில் கலந்து வரும் போது, வனவிலங்குகள் அருந்தினால், உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
எனவே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுவர்விளம்பரம் செய்யவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ வனத்துறையினர் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.