/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டி ரேஸ் கோர்ஸ் பசுமைவெளி பூங்கா அமைக்க முடிவு
/
ஊட்டி ரேஸ் கோர்ஸ் பசுமைவெளி பூங்கா அமைக்க முடிவு
ADDED : செப் 25, 2024 12:37 AM

சென்னை: கிண்டியை தொடர்ந்து ஊட்டி ரேஸ் கோர்ஸ் கிளப்பிடம் மீட்கப்பட்ட நிலத்தில், பசுமைவெளி பூங்கா அமைக்க, தோட்டக்கலைத் துறை முடிவெடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 52.3 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டு இருந்தது. குத்தகை பாக்கியாக, 822 கோடி ரூபாய் நிலுவை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக நடந்த வழக்கில், குத்தகை நிலத்தை அரசு கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம், வருவாய்துறை கட்டுப்பாட்டிற்கு, இந்த நிலம் கொண்டுவரப்பட்டு உள்ளது. சமீபத்தில், கிண்டி ரேஸ்கோர்ஸ் குத்தகை நிலமும், அரசு கட்டுப்பாட்டில் எடுத்துவரப்பட்டுள்ளது. இவ்விருது நிலங்களும், தோட்டக்கலைத்துறையிடம் நில பரிமாற்ற முறையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கிண்டியில் பிரமாண்டமான தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி ரேஸ்கோர்ஸ் நிலத்தில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. தற்போது, திட்டம் மாற்றப்பட்டு, பசுமை வெளி பூங்காவாக பராமரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை பூங்காக்கள் பராமரிப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஊட்டி ரேஸ்கோர்ஸ் நிலத்தில் 7 ஏக்கர் சதுப்பு நிலமாக உள்ளது. மழைக்காலங்களில் மலையில் இருந்து வரும் நீர், இவ்வழியாக பூமிக்குள் செல்கிறது. இந்த இடத்தை பூங்காவாக மாற்றி கட்டுமானங்களை செய்தால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். நிலச்சரிவும் ஏற்படும். மேலும், ஊட்டியில் போதுமான பூங்காக்கள் உள்ளது. சமீபத்தில் கூட புதிய பூங்காவை தோட்டக்கலைத்துறை திறந்துள்ளது. எனவே, மீட்கப்பட்ட நிலத்தில், தற்போதுள்ள கட்டமைப்புகளை மாற்றாமல், பசுமைவெளி பூங்கா அமைத்து பராமரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இப்பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.