/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமராவதி அணையில் மீன் பிடிப்பு சரிவு; காற்றின் வேகம் அதிகரிப்பால் சிக்கல்
/
அமராவதி அணையில் மீன் பிடிப்பு சரிவு; காற்றின் வேகம் அதிகரிப்பால் சிக்கல்
அமராவதி அணையில் மீன் பிடிப்பு சரிவு; காற்றின் வேகம் அதிகரிப்பால் சிக்கல்
அமராவதி அணையில் மீன் பிடிப்பு சரிவு; காற்றின் வேகம் அதிகரிப்பால் சிக்கல்
ADDED : அக் 03, 2024 04:09 AM

உடுமலை : உடுமலை அமராவதி அணையில், நீர் இருப்பு மற்றும் காற்றின் வேகம் அதிகரிப்பு காரணமாக மீன் பிடிப்பு குறைந்துள்ளது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில், மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில், திலேபியா, கட்லா, மிர்கால் உள்ளிட்ட ரக மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு, மீன் பிடிக்கப்பட்டு வருகிறது.
மீனவர்கள் பரிசல் வாயிலாக, மீன் பிடித்து வருகின்றனர். இதற்காக, ஒரு மீனவர், ஒரு உதவியாளர் என, இருவரை கொண்ட, 20 பரிசல்கள் உள்ளன.
தினமும் அணையில் மீன் வலை விரிக்கப்பட்டு, அதிகாலை வலை சேகரிக்கப்பட்டு, அணைப்பகுதியிலுள்ள மீன் வளர்ச்சிக்கழக பண்ணை மற்றும் நகர பகுதியிலுள்ள மீன் வளர்ச்சி கழக கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த ஜூலை, 18ல் அணை நிரம்பிய நிலையில், தொடர்ந்து இரு மாதமாக அணை நீர் இருப்பு அதிகளவு காணப்பட்டதால், மீன் பிடிப்பு குறைந்துள்ளது.
நீர் இருப்பு மற்றும் நீர் தேங்கும் பரப்பளவு குறைந்து காணப்படும் காலத்தில், தினமும், 700 கிலோ வரை மீன்கள் பிடிக்கப்பட்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
தற்போது நீர் தேங்கும் பரப்பும், நீர் ஆழம் அதிகரித்ததோடு, காற்றின் வேகமும் அதிகளவு இருப்பதால், மீன் பிடிப்பு குறைந்து, சராசரியாக தினமும், 60 முதல், 150 கிலோ வரை மட்டுமே பிடிக்கப்படுகிறது.
ஒரு சில நாட்களில், 20 கிலோ வரை மட்டுமே மீன் சிக்குவதால், மீனவர் குடும்பங்கள் பாதித்து வருவதோடு, மீன் பண்ணைக்கு மீன் வாங்க வரும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் சூழல் உள்ளது.
மீனவர்கள் கூறுகையில், 'அணையின் நீர் இருப்பு மற்றும் காற்றின் வேகம் அதிகரிப்பால், மீன் பிடிப்பது பெருமளவு குறைந்தது. பிடிக்கப்படும் மீன் எடைக்குரிய கூலி வழங்கப்படுவதால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது, அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் நிலையில், கூடுதல் யூனிட், பரிசல் இயக்கினால், மீன் வரத்து அதிகரிக்கும். மீன் வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.