/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது ஏப்., 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
/
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது ஏப்., 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது ஏப்., 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது ஏப்., 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
ADDED : ஏப் 11, 2025 01:00 AM
சென்னை:'வங்கக்கடலில் நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில், வரும், 16 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் தென் மண்டல தலைவர் பி. அமுதா கூறியதாவது:
மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இது, இன்று வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கும். இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 16 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில், அதிகபட்ச வெப்ப நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஒரு சில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை, 38 டிகிரி செல்ஷியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், மணிக்கு, 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.
வெயில் சதம்
நேற்று மாலை நிலவரப்படி, வேலுாரில் அதிகபட்சமாக, 105 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40.6 டிகிரி செல்ஷியஸ்; ஈரோட்டில், 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. சென்னை மீனம்பாக்கம், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.