/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்பில் புகுந்த மான்; வனத்துறை எச்சரிக்கை
/
குடியிருப்பில் புகுந்த மான்; வனத்துறை எச்சரிக்கை
ADDED : ஜன 12, 2025 11:15 PM

வால்பாறை; தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் வரும் வன விலங்குகளுக்கு உணவு வழங்கினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
வால்பாறையில், சமீப காலமாக வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்து செல்கிறது. குறிப்பாக யானை, சிங்கவால்குரங்குகள், மான், மயில் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் முகாமிடுகிறது.
பகல் நேரத்தில், வன விலங்குகள் எஸ்டேட் பகுதிக்குள் நுழைவதை, சுற்றுலாபயணியர் கண்டு ரசிக்கின்றனர்.
குறிப்பாக உணவு தேடி தான் வன விலங்குகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. மாறுபட்ட உணவை வன விலங்குகள் உட்கொள்வதால், அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் அவை முகாமிடுகின்றன.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வால்பாறை அடுத்துள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் கடமான் ஒன்று, உணவு தேடி அலைகிறது.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை மலைப்பாதையில் வனவிலங்குகள் அடிக்கடி ரோட்டை கடக்கின்றன. தொடர் விடுமுறையால், அங்கு திரண்டுள்ள சுற்றுலாபயணியர் தங்களது வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வேண்டும். தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் வரும் வனவிலங்குகளுக்கு மக்கள் உணவு வழங்கக்கூடாது. மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.