ADDED : ஆக 21, 2026 06:50 PM
வால்பாறை: வால்பாறை நகரில் உள்ள திருஇருதய மேல்நிலைப்பள்ளியில், 420 மாணவ, மாணவியர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை பள்ளியில் சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் விடுப்பு எடுத்த நிலையில், சமையலர் ஒருவர் மட்டுமே பணியில் இருந்துள்ளார்.
அவர் சமையல் செய்யும் போது, பருப்பு சாதத்தில் அடிபிடித்து, மாணவர்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மீண்டும் சமைக்க, சமையருக்கு உதவினர்.
இதனிடையே சத்துணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து பள்ளி ஆசிரியர்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். குறிப்பிட்ட நேரத்தில் மதிய உணவு வழங்காததால் மாணவர்கள் பசியில் தவித்தனர்.
இதனையடுத்து, பள்ளி சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு இடைவேளையின் போது பிஸ்கட் வழங்கப்பட்டது. அதன்பின் மாலை, 3:15 மணிக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
நகராட்சி பொறியாளர் ஆறுமுகத்திடம் கேட்டபோது, ‘பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் திடீர் விடுப்பு எடுத்ததால், இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சமையலர் மதிய உணவு தயாரித்ததால் தாமதம் ஏற்பட்டது. முன் அறிவிப்பு இன்றி விடுப்பு எடுத்த அமைப்பாளர் மற்றும் உதவியாளர்களிடம் விளக்கம் கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.
