UPDATED : ஆக 27, 2026 09:01 PM
ADDED : ஆக 27, 2026 08:12 PM
சின்னதடாகம்: பழுதடைந்துள்ள சின்னதடாகம் பஸ் நிறுத்தத்தை செப்பனிட, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடாகம் வட்டாரத்தில், சின்னதடாகம் பஸ் நிறுத்தம் முக்கிய பஸ் நிறுத்தமாக உள்ளது. இங்கிருந்து காலை, மாலை கோவை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள், இதேபோல பல்வேறு பணி நிமித்தமாக கோவை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இதே போல, மன்னார்காடு, அகளி உள்ளிட்ட கேரளா மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சின்னதடாகம் வழியாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சின்னத்தடாகம் பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் சேதம் அடைந்துள்ளன. பஸ் நிறுத்தத்தை சுற்றிலும் உள்ள பகுதி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த பஸ் நிறுத்தத்தை உடனடியாக செப்பனிட்டு, பழுது பார்த்து, பயணிகள் தாராளமாக பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் சின்ன தடாகம் ஊராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
