மக்காச்சோளம் பயிர் பாதிப்பு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
மக்காச்சோளம் பயிர் பாதிப்பு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
UPDATED : நவ 06, 2026 07:15 PM
ADDED : நவ 05, 2026 07:16 PM
உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில் மக்காச்சோள பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இழப்பீட்டு தொகை உடனடியாக வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தில், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், மக்காச்சோளம் சாகுபடி செய்தனர்.
வேளாண் துறை அறிவுறுத்தல் அடிப்படையில், பெரும்பாலான விவசாயிகள் மக்காச்சோளம் பயிருக்கு, காப்பீடு தொகை செலுத்தினர்.
கடந்தாண்டு நிலவிய கடுமையான வறட்சி, அமெரிக்கன் படைப்புழு தாக்கம், அதிக மூடுபனி உள்ளிட்ட பல்வேறு இயற்கை காரணங்களால், மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதிகமான நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு, தனியார் காப்பீட்டு நிறுவனம் இது வரை பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு தொகையை விவசாயிகளுக்கு வழங்காமல் கால தாமதம் செய்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் மகசூல் பாதிக்கப்பட்ட, வட்டாரங்களுக்கு உடனடியாக இழப்பீடு கிடைக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், கூட்டுறவு அணி மாநில அமைப்பாளர் குப்புச்சாமி, தமிழக முதல்வர், வேளாண் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார்.
