ADDED : நவ 13, 2026 07:41 PM

அன்னூர்: ஒரு மாதமாக குடிநீர் வராததால் கோபமடைந்த கிராம மக்கள், ஊராட்சி அலுவலகத்தை நான்கு மணி நேரம் முற்றுகையிட்டனர். துடியலூரிலும் குடிநீர் கேட்டு மக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பச்சாபாளையம் ஊராட்சியில், பச்சாபாளையம், மோளபாளையம், உருமாண்ட கவுண்டன்புதூர், பூரண்டாம்பாளையம், தீத்தாம்பாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. 1,500 குடும்பங்கள் வசிக்கின்றன.
இவர்கள் ஒரு மாதமாக குடிநீர் இன்றி தவிக்கின்றனர். ஆருத்ரா ஸ்ப்ரிங் பீல்டு நகருக்கும் குடிநீர் குறைவாக வருகிறது. இங்கு வசிப்பவர்களும் ஐந்து கிராம மக்களும், நேற்று காலை பச்சாபாளையம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து பில்லூர் குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முத்துராஜ், நீலம்பூர் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், தெற்கு வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் ஊராட்சி அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர்.
அதிகாரிகளை சுற்றி வளைத்த பொதுமக்கள், 'ஆருத்ரா குடியிருப்பில் மின்மோட்டார் இணைப்பு துண்டித்ததால், நீர் ஒரு மாதமாக கிடைக்கவில்லை. கரியாம்பாளையத்தில் இருந்து ஆற்று நீர் மிகக் குறைவாக வருகிறது. பில்லூர் திட்டத்தில் ஐந்து பொது குழாய்கள் அமைக்க வேண்டும். கரியாம்பாளையத்திலிருந்து கூடுதலாக ஆற்று நீர் வழங்க வேண்டும்' என சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
நிர்வாக பொறியாளர் சித்ரா பதிலளிக்கையில், 'பில்லூர் திட்டத்தில் கூடுதலாக குடிநீர் வழங்க முயற்சிக்கிறோம்' என்றார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முத்துராஜ், உடனே ஆருத்ராவில் உள்ள போர்வெல் சரி செய்யப்படும். கரியாம்பாளையத்தில் இருந்து கூடுதலாக குடிநீர் வழங்கப்படும், என உறுதி அளித்தார்.
இதையடுத்து சமாதானம் ஆன மக்கள் கலைந்தனர். மூன்றரை மணி நேர முற்றுகை முடிவுக்கு வந்தது.
துடியலுாரிலும் இதே நிலை
மாநகராட்சி 2வது வார்டு ஈஸ்வர் பார்க், டி.என்.பி., நகரில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி, 50க்கும் மேற்பட்ட பெண்கள், துடியலூரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் மாநகராட்சி அலுவலர்கள் விரைவில் குடிநீரை வினியோகிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். அனைவரும் கலைந்து சென்றனர்.
2வது வார்டு பெண்கள் கூறுகையில், 'துடியலூரில் வேறு பகுதிகளில் வாரத்திற்கு மூன்று முறை குடிநீர் வருகிறது. எங்கள் பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை, அதுவும் குறைவான குடிநீர் மட்டுமே வருகிறது. அதிகாரிகளிடம் புகார் செய்தால் கண்டுகொள்வதில்லை’ என்றனர்.
