ADDED : செப் 03, 2026 04:51 PM
தூய்மையாக பராமரிக்காவிட்டால் அபராதம்
அன்னூர், செப். 4-
சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பராமரிக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும், என, மாவட்ட சுகாதார அலுவலர் தெரிவித்தார்.
அன்னூர் வட்டாரத்தில், அன்னூர் பேரூராட்சி, மசக்கவுண்டன் செட்டிபாளையம் மற்றும் ஒட்டர்பாளையம் ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. பலர் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி நேற்று மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி, செம்மாணி செட்டிபாளையத்தில், துருவ் நகரில் டெங்கு பாதிப்புக்கு உள்ளான பகுதியில் ஆய்வு செய்தார்.
அங்கு வீடுகளில் பயன்படுத்தப்படாத தொட்டிகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், ஆகியவற்றில் தண்ணீர் தேங்கி உள்ளதா என ஆய்வு செய்தார்.
அங்கு பொது குடிநீர் குழாயில் தண்ணீரை பிடித்து குளோரோஸ்கோப் வாயிலாக அந்தத் தண்ணீர் குளோரினேசன் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.
அப்பகுதி மக்களிடம் எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை கொசுக்களை ஒழிக்க புகை மருந்து அடிக்கின்றனர் என விசாரித்தார்.
பல வீடுகளில் நிலமட்ட தண்ணீர் தொட்டி, மேல்நிலைத் தொட்டி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சி அலுவலர்களிடம் அவர் பேசுகையில், டெங்கு பாதித்த பகுதியில் ஒரு வாரத்திற்கு தினமும் புகை மருந்து அடிக்க வேண்டும். இப் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதை சுத்தப்படுத்த வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்காதவர்களுக்கு முதல் கட்டமாக எச்சரிக்கை விடுக்க வேண்டும். பின்னர் அபராதம் விதிக்க வேண்டும், என்றார்.
அப்பகுதி குடியிருப்போரிடம், வீட்டில் பிடித்து வைத்துள்ள தண்ணீரை மூடி வைக்க வேண்டும். மூடியில்லாத பாத்திரங்களை துணியால் மூடி வைக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு மேல் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற வேண்டும். பயன்படுத்தாத பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால், மருந்து கடைகளில் சுயமாக மாத்திரை வாங்கி சாப்பிடக்கூடாது. அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தட்டணுக்களின் எண்ணிக்கை பரிசோதிக்கப்பட்டு, டெங்கு உறுதி செய்யப்பட்டால் கோவைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள், என்றார்.
அப்பகுதியில் மாஸ் கிளீனிங் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, தெலுங்குபாளையம் மற்றும் பொன்னே கவுண்டன்புதூர் துணை சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்தார்.
பொன்னே கவுண்டன் புதூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் துணை சுகாதார கட்டடத்தை ஆய்வு செய்தார்.
ஆய்வில் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ராஜவேலு, வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்தராஜ், மருத்துவம் சாரா வட்டார மேற்பார்வையாளர் கோவிந்தசாமி, ஊராட்சி செயலர் பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
