/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையால் நிரம்பிய தேவம்பாடி குளம்: விவசாயிகள் மகிழ்ச்சி
/
மழையால் நிரம்பிய தேவம்பாடி குளம்: விவசாயிகள் மகிழ்ச்சி
மழையால் நிரம்பிய தேவம்பாடி குளம்: விவசாயிகள் மகிழ்ச்சி
மழையால் நிரம்பிய தேவம்பாடி குளம்: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : நவ 05, 2024 08:43 PM

பொள்ளாச்சி; தொடர் மழையால், பொள்ளாச்சி அருகே தேவம்பாடிவலசு குளம், நிரம்பியுள்ளதால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே, தேவம்பாடிவலசு குளம், 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது; 3,500 அடி நீளம் உள்ள குளத்தில் 6.6 மில்லியன் கனஅடி நீரை தேக்கலாம். இரண்டு மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.
குளத்தின் வாயிலாக, 220 ஏக்கர் பாசனம் பெறுகிறது. மேலும், மழைநீரை ஆதாரமாக கொண்ட குளம் நிரம்பினால், தேவம்பாடி மட்டுமின்றி சுற்றுப்பகுதி கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
மழை காலங்களில் வழிந்தோடும் நீரை சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்ட குளம், கடந்த, 2022ம் ஆண்டு நிரம்பியது. அதன்பின், குளத்துக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது; முட்புதர்கள், மண் படர்ந்து காடு போல காட்சியளித்தது.
பராமரிப்பில்லாமல் இருந்த குளத்தை துார்வாரி, வீணாக செல்லும் மழைநீரை சேமிக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், விவசாயிகள் மற்றும் அரசு உதவியுடன் குளம் துார்வாரப்பட்டது. இதனை அடுத்து மழைக்காலங்களில் குளம் நிரம்பியது.
குளம் துார்வாரப்பட்ட பின், கடந்த, நான்கு ஆண்டுகளாக நீர் நிரம்பி காட்சியளித்தது. தற்போது, போதிய பருவமழை கை கொடுக்காத சூழலில், கடந்த பிப்., மாதம் நீர்வரத்து இல்லாமல் குளம் வறண்டு காணப்பட்டது. அதன்பின், தொடர் மழை பெய்தபோதும் குளம் முழு கொள்ளளவை எட்டவில்லை.கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளவை எட்டியுள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'தேவம்பாடிவலசு குளம் மூன்றாவது முறையாக நிரம்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முன், 2018, 2022ம் ஆண்டுகளில் குளம் நிரம்பியது. குளத்தின் கரை முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், கால்வாயில் கசிவு உள்ளதா என கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது.
குளத்துக்கு நீர் வரத்துள்ள கால்வாய் போதிய பராமரிப்பின்றி உள்ளது. புதர் மண்டி காணப்படும் கால்வாயை துார்வார வேண்டும். 200 மீ., துாரத்துக்கு கான்கிரீட் கால்வாய் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.