/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காப்பு கட்டி கந்த சஷ்டி விரதம் துவக்கிய பக்தர்கள்
/
காப்பு கட்டி கந்த சஷ்டி விரதம் துவக்கிய பக்தர்கள்
ADDED : அக் 22, 2025 11:46 PM

சூலுார்: கந்த சஷ்டி விழாவை ஒட்டி, காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை துவக்கினர்.
சூலுார் வட்டார முருகன் கோவில்களில் நேற்று காலை கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார விழா துவங்கியது.
கருமத்தம்பட்டி அடுத்த சென்னி யாண்டவர் கோவிலில் நேற்றுக்காலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் பக்தர்கள் காப்பு கட்டி கொண்டு கந்த சஷ்டி விரதத்தை துவக்கினர். 11:00 மணிக்கு சத்ரு சம்ஹார ஹோமம் மற்றும் அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதேபோல், சூலுார் சிவன் கோவில், காங்கயம்பாளையம் சென்னி யாண்டவர் கோவில், கிட்டாம் பாளையம் பழனியாண்டவர் கோவில், மற்றும் பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை ஒட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகப் பெருமானை வழிபட்டனர்.
அன்னூர் மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில், புதிதாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பரில் கும்பாபிஷேகம் நடந்தது. முதலாம் ஆண்டு கந்தர் சஷ்டி சூரசம்ஹார விழா நேற்று துவங்கியது. காலையில் காப்பு அணிவிக்கப்பட்டது. மாலையில் முதற்கால வேள்வி பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று (23ம் தேதி) காலையில் இரண்டாம் கால வேள்வி பூஜையும், மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. வரும் 27ம் தேதி மாலை 4:00 மணிக்கு அம்மனிடம் வேல் வாங்குதலும், 5:00 மணிக்கு சூரசம்ஹாரமும், இரவு தவசு காட்சியும் நடக்கிறது.வருகிற 28ம் தேதி காலை 11:00 மணிக்கு வள்ளி தெய்வானை முருகப்பெருமானின் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
சித்தர்கள் வழிபாடு செய்த, பழமையான சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது. காலை 7:00 மணிக்கு, மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது. காலை 9.30 மணிக்கு காப்பு கட்டப்பட்டது. வேள்வி பூஜை நடந்தது. அன்னூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து 27ம் தேதி வரை தினமும் வேள்வி பூஜை, மூல மந்திர அர்ச்சனை நடக்கிறது. வரும் 28ம் தேதி மதியம் 12:00 மணிக்கு தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், பேரொளி வழிபாடும் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் அருளுரை வழங்குகிறார்.