UPDATED : ஜூன் 28, 2026 05:54 PM
ADDED : ஜூன் 28, 2026 05:51 PM
அன்னுார்: பொகலுார் ஊராட்சி, சொக்கட்டாம்பள்ளியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் பத்ரகாளியம்மன் சிலையும் உள்ளது. பழமையான இக்கோவிலுக்கு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து சொக்கட்டாம்பள்ளி மக்கள் கூறுகையில், 'இங்குள்ள மாகாளியம்மன் கோவிலில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக சொக்கட்டாம்பள்ளி மற்றும் கக்கமல்லன் புதுாரைச் சேர்ந்த, 150 குடும்பங்கள் வழிபாடு செய்து வருகிறோம். ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்றும், ஆண்டுக்கு ஒரு முறை குண்டம் திருவிழாவும் நடத்தி வருகிறோம்.
இந்நிலையில் இதை ஒட்டியுள்ள பகுதியைச் சேர்ந்த ஒருவர் இது பட்டா நிலத்தில் உள்ள கோவில். இந்த கோவிலுக்கு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கிறார். இது குறித்து தாலுகா அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்துள்ளோம். 100 ஆண்டுகளாக வழிபட்டு வந்த கோவிலில் தடையில்லாமல் தொடர்ந்து வழிபட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
