ADDED : செப் 06, 2026 03:20 PM
வால்பாறை: தொழிலாளர் ஈமசடங்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக வணிகர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக வணிகர் சம்மேளனத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பரமசிவம், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த மூன்று தலைமுறையாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு எஸ்டேட்களில் குறைந்த சம்பளத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலைப்பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் இறந்தால், ஈமசடங்கு உதவித்தொகையாக, அரசின் சார்பில் 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் ஈமசடங்கு உதவித்தொகை பெற ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, குறைந்த சம்பளத்தில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் குடும்பத்துக்கு, அரசின் ஈமசடங்கு உதவித்தொகை கிடைக்கும் வகையில், ஆண்டு வருமான உச்ச வரம்பை மாற்றி, தொழிலாளர் அனைவருக்கும் அரசின் ஈமசடங்கு உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
