/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதையோர பாழடைந்த கிணறு; வன விலங்குகளுக்கு ஆபத்து
/
பாதையோர பாழடைந்த கிணறு; வன விலங்குகளுக்கு ஆபத்து
ADDED : நவ 12, 2024 05:51 AM

கோவை ; கோவை, காரமடை தாலுகா, சீளியூரில் பாதையோரத்தில் இருக்கும் பயன்பாட்டில் இல்லாத பாழடைந்த கிணறால், மக்களும், வனவிலங்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
காரமடை, சீளியூரில் இருந்து வழுக்குப்பாறை செல்லும் பாதை ஓரத்தில், தனியார் விவசாய பூமி உள்ளது. இதற்கு பாதுகாப்புச் சுவர் ஏதுமில்லை. பாதையை ஒட்டியே கிணறும் உள்ளது.
இந்தவழியாக செல்லும் விவசாயிகள் சற்று கவனம் பிசகினாலும் உள்ளே விழும் அபாயம் உள்ளது.
இவ்வழியாக வரும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளும் கிணற்றுக்குள் தவறி விழும் அபாயம் இருப்பதால், வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜெயப்பிரகாஷ் கூறுகையில், “இந்தக் கிணறு பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை. சுற்றுச்சுவர் இல்லாததால், கிணறு இருப்பதே தெரியாது. வனத்துறையினரின் ரோந்து வாகனம் கூட கவிழும் வாய்ப்பு உள்ளது.
யானைகள் இந்த வழியாக வந்தால், கிணறுக்குள் விழுந்து விடும். இதுதொடர்பாக வனத்துறையிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பல்வேறு இடங்களில் வனவிலங்குகள் குழிகளுக்குள் விழும் தகவல்கள் அவ்வப்போது வருகின்றன.
எனவே, இங்கும் அதுபோன்று சம்பவம் நிகழ்வதற்குள் வனத்துறையினர், இந்தக் கிணறை மூடவோ, சுற்றுச்சுவர் அமைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.