ADDED : ஆக 18, 2026 05:52 PM

உடுமலை: உடுமலை நகர பகுதிகளிலுள்ள, மழை நீர் வடிகால்கள் ஆக்கிரமித்தும், துார்வாரப்படாமலும், மாயமாகி வருகிறது.
உடுமலை - தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, பழநி ரோடு பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், பெரிய அளவில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டன.
அதே போல் நகராட்சி சார்பில், தாலுகா அலுவலகம், நீதிமன்றம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் நகர பகுதிகளில், பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வடிகால் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை நீர் வடிகால்கள் பராமரிப்பு குறித்து நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், வணிக வளாகம், கடை உரிமையாளர்கள் மழை நீர் வடிகாலை ஆக்கிரமித்தும், அடைத்தும், கட்டுமானங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
அதே போல், கல்பனா ரோடு சந்திப்பு, மாரியம்மன் கோவில் சந்திப்பு, பைபாஸ் ரோடு சந்திப்பு, திருப்பூர் ரோடு சந்திப்பு, தளி ரோடு என அனைத்து பகுதிகளிலும் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, ஆக்கிரமிப்புகளால் பல இடங்களில், மூடப்பட்டுள்ளது.
இதனால், மழை நீர் மற்றும் கழிவு நீர் வெளியேற வழியின்றி, தேங்கி வருகிறது. எனவே, நகர பகுதியிலுள்ள மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
