/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்தினபுரி 31வது வார்டில் நோய்கள் இலவசம்
/
ரத்தினபுரி 31வது வார்டில் நோய்கள் இலவசம்
ADDED : ஏப் 21, 2025 10:11 PM

நோய்கள் இங்கு இலவசம்
ரத்தினபுரி, 31வது வார்டில் சாக்கடை கால்வாய் சீரான இடைவெளியில் துார்வாருவதில்லை. இதனால், கழிவுகள் அடைத்து சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகமாக இருப்பதால், நோய்கள் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது.
- சாரதி, ரத்தினபுரி.
மூட்டையாய் குவியுது
காந்திபுரம், ராம்நகர், கோகுலம் வீதியில், சாலையோரம் தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுகிறது. விடுதிகள், ஓட்டல்கள் கழிவுகளை பெரிய மூட்டைகளில் கொண்டு வந்து போட்டுச் செல்கின்றனர். பெருமளவு தேங்கியுள்ள கழிவுகளை அகற்றுவதுடன், இங்கு கொட்டாமல் இருக்கவும் நிரந்தர நடவடிக்கை வேண்டும்.
- வேலுச்சாமி, கோகுலம் வீதி.
சாக்கடை அடைப்பு
வரதராஜபுரம், 60வது வார்டு, தண்ணீர் டேங்க் மற்றும் விநாயகர் கோவில் அருகே, சாக்கடை கால்வாய் சரிவர சுத்தம் செய்வதில்லை. கால்வாயில் கழிவு தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாய் ஓரத்திலும் குப்பை குவிந்துள்ளது. இதனால், குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- சுரேஷ், வரதராஜபுரம்.
தொற்றுநோய் அபாயம்
பொம்மணாம்பாளையம், 38வது வார்டு, லட்சுமி நகர், மின்மயான சந்திப்பில் குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தொற்றுநோய் அபாயம் உள்ளதால், குப்பையை அகற்ற வேண்டும். திறந்தவெளியில் குப்பை கொட்டுவதையும் தடுக்க வேண்டும்.
- சண்முகம், பொம்மணாம்பாளையம்.
விழும் நிலையில் துாண்
பீளமேடு, 52வது வார்டு, திருமகள் நகரில், செம்மொழி பூங்கா நுழைவுவாயில் இரும்பு கேட்டின் துாண் இருபுறமும் சேதமடைந்துள்ளது. துாணிலிருந்து கேட் விழும் நிலையில் உள்ளது. பூங்காவிற்கு செல்லும் குழந்தைகள், பெரியவர்களுக்கு மிகவும் ஆபத்தாக உள்ளதால், விரைந்து சீரமைக்க வேண்டும்.
- யுவராஜ்,
திருமகள் நகர்.
வீணாகும் குடிநீர்
பி.என்.புதுார், 41வது வார்டு, ஸ்ரீ நகர், நான்காவது வீதியில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் குழாய் உடைந்துள்ளது. தொடர்ந்து, குடிநீர் வீணாகி வருகிறது. தொடர்ந்து பலமுறை புகார் செய்தும், குழாய் உடைப்பை சரிசெய்யவில்லை.
- ரத்தினம், பி.என்.புதுார்.
மினி குப்பைக்கிடங்கு
அவிநாசி ரோடு, கொடிசியா பின்புறம், சேரன்மாநகர், 24வது வார்டு, என்.ஆர்.ஐ., கார்டன்ஸ் பகுதியில் தொடர்ந்து சாலையின் இருபுறமும் குப்பை கொட்டப்படுகிறது. சாலையெங்கும் குப்பை சிதறிக்கிடக்கிறது. மினி குப்பை கிடங்கு போல உருவாகி வருகிறது.
- தங்கவேல், சேரன்மாநகர்.
குழிகளால் தொடரும் விபத்து
இடையர்பாளையம், 93வது வார்டு, மதுரை வீரன் கோவில் வீதியில், குடிநீர் குழாய் பதிப்பிற்காக தோண்டப்பட்ட குழி, சரியாக மூடப்படவில்லை. பள்ளங்களாக இருக்கும் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். விரைந்து குழிகளை மூட வேண்டும்.
- செந்தில்குமார், இடையர்பாளையம்.
சீரமைக்க வேண்டும்
அவிநாசி ரோடு மேம்பாலம் கீழ், சர்வீஸ் ரோடு மிகவும் மோசமாக பழுதடைந்துள்ளது. பள்ளங்கள், திறந்தநிலை சாக்கடை என ஆபத்தாக உள்ளது. விபத்துகளால் உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன் சாலையை சீரமைக்க வேண்டும்.
- ஸ்னேகா, தண்ணீர்பந்தல்.
போக்குவரத்திற்கு இடையூறு
போத்தனுார், மேட்டூர் 100வது வார்டு, மெயின் ரோட்டில் செயல்படும் ஒர்க்ஷாப்பிற்கு வரும் ஆட்டோக்களை, சாலையோரம் நிறுத்துகின்றனர். சாலையில் நடந்து செல்லவும், மற்ற வாகனங்கள் செல்லவும் மிகவும் சிரமமாக உள்ளது. விபத்துகள் நடக்கும் முன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சரவணன், போத்தனுார்.
கழிவுநீர் தேக்கம்
குனியமுத்துார், நரசிம்மபுரம், எட்டாவது வீதி, ஐயப்பா நகரில், சாலையோரம் பெருமளவு குப்பை குவிந்துள்ளது. பல வாரங்களாக அகற்றப்படாத குப்பை, காற்றில் பறந்து அருகிலுள்ள சாக்கடை கால்வாயில் விழுகிறது. இதனால், கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- அனன்யா, நரசிம்மபுரம்.