சம்பளம் கிடைக்காததால் காலை உணவு திட்ட ஊழியர்கள் தவியாய் தவிப்பு
சம்பளம் கிடைக்காததால் காலை உணவு திட்ட ஊழியர்கள் தவியாய் தவிப்பு
UPDATED : ஆக 18, 2026 05:31 AM
ADDED : ஆக 17, 2026 06:01 PM

அன்னூர்: அன்னூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இம்மாதம் இதுவரை சம்பளம் வழங்கப்படாததால் தவித்து வருகின்றனர். தமிழகத்தில், கடந்த 2022 செப். 15ம் தேதி முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது. முதல் கட்டமாக மாநகராட்சி பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை காலை உணவு வழங்கப்பட்டது. இதன் பிறகு படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. கிராமப்புறத்தில் ஏழை, எளிய, மாணவ, மாணவியருக்கு காலை உணவு திட்டம் மிகவும் உதவியாக உள்ளது.
கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வோரிடம் இத்திட்டம் கூடுதல் வரவேற்பு பெற்றுள்ளது. காலை உணவு வழங்க, சமையலர் மற்றும் உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சம்பளம் மிகவும் தாமதமாக வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து காலை உணவு திட்ட ஊழியர்கள் சிலர் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக, மாத சம்பளம் மிக தாமதமாக வழங்கப்படுகிறது. மாதம்தோறும் 5ம் தேதி தர வேண்டிய சம்பளம், இம்மாதம் இதுவரை வழங்கப்படவில்லை. சம்பளம் வழங்காததால் குடும்பத்தை நடத்த முடியாமல் தவிக்கிறோம். மாதம்தோறும் 5ம் தேதி சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
